திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகம்; கலெக்டரிடம் பா.ம.க. புகார்


திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகம்; கலெக்டரிடம் பா.ம.க. புகார்
x
தினத்தந்தி 21 Jan 2020 4:30 AM IST (Updated: 20 Jan 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாக கலெக்டரிடம் பா.ம.க.வினர் புகார் மனு கொடுத்தனர். இதுபோல 100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ.198 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என வக்கீல் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் உள்பட மொத்தம் 354 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பழனிதேவி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கஞ்சா விற்பனை- ரூ.198 கோடி ஊழல்

கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் திலீப்குமார் கொடுத்துள்ள மனுவில், திருச்சி காந்தி மார்க்கெட், வாழைக்காய் மண்டி, தாராநல்லூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதை விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

இதுபோல பத்து ரூபாய் இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சதீஷ்குமார் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

100 நாள் வேலைஉறுதி திட்டத்தில், 100 சதவீதம் மனித சக்தியை கொண்டு கட்டிடங்கள் கட்டுதல், ஏரி-குளம் தூர்வாருதல், பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது. கிராமப்புறங்களில் நடக்கும் இந்த பணியை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதுடன் கிராம மக்கள் சமூக தணிக்கை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வாதங்கள் செய்து ஒப்புதல் வழங்கப்படும். கடந்த 3 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் ரூ.198 கோடிக்கு மேல் ஊழல் இத்திட்டத்தில் நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமரின் பிறப்பு சான்றிதழ் கேட்டு மனு

திருச்சி மாவட்ட அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் சம்சுதீன் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில், தற்போது குடியுரிமை சட்டத்திற்கு சம்பந்தப்பட்டவர்களுடைய பெற்றோரின் பிறப்பு சான்றிதழ், அவர்களின் மூதாதையர் பிறப்பு சான்றிதழ் கோரப்படுகிறது. ஆகையால், குடியுரிமை சட்டத்தை திருத்திய பிரதமரும், உள்துறை மந்திரியும் அவர்களது பெற்றோர் மற்றும் மூதாதையர் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினால், நாங்களும் அந்த ஆவணங்களை பெற ஏதுவாக இருக்கும். எனவே, அந்த ஆவணங்களை கலெக்டர் பெற்றுத்தர கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

Next Story