குறைதீர்க்கும் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்


குறைதீர்க்கும் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 21 Jan 2020 3:45 AM IST (Updated: 20 Jan 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் குவிந்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்களுடைய கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

இதில் திண்டுக்கல் மாநகராட்சி என்.எஸ்.கே.நகர். பாறைக்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்தனர். வீட்டுமனை பட்டா கேட்டு தனித்தனியாக மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பாறைக்குளம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அதில் பலருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். அரசின் திட்டத்தில் வீடு கட்ட முடியாத நிலையில் தவிக்கிறோம். எனவே, எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என்றனர்.

அதேபோல் தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலச்சங்கத்தினர் ஊர்வலமாக வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், சின்னாளப்பட்டி அருகே மேட்டுப்பட்டி, மேலக்கோட்டை, கீழக்கோட்டை, புதுக்கோட்டை மற்றும் பட்டிவீரன்பட்டி அருகே காந்திபுரம், தேவரப்பன்பட்டி, பழனி அருகே மூலக்கடை உள்ளிட்ட கிராமங்களில் சலவை தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். நாங்கள் வீடு கட்டி வசிப்பதற்கு வசதியாக அரசு இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும். மேலும் பண்ணைக்காடு காமராஜபுரம் சலவைத்துறையை சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள குருநாதநாயக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், குருநாதநாயக்கன்பட்டி பெருமாள்குளம், நல்லப்பகவுண்டன்குளம் ஆகியவை ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதி குறைந்து மழைக் காலத்தில் தேவையான அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. எனவே, குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சீலப்பாடியை சேர்ந்த விவசாயி பெருமாள்சாமி (வயது 80) தனது மனைவி சுப்புலட்சுமி மற்றும் மகன்கள், மகள்கள், பேரன்- பேத்திகள் என 16 பேருடன் வந்து மனு கொடுத்தார். அதில் கடந்த 1965-ம் ஆண்டு 3 பேரிடம் வாங்கிய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் போலி ஆவணம் மூலம் அந்த நிலத்தை அபகரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

திண்டுக்கல் அருகேயுள்ள கண்ணார்பட்டி பிரிவை அடுத்த இந்திராநகரை சேர்ந்த முருகன் மனைவி வீரம்மாள் (60) கொடுத்த மனுவில், கடந்த 1999-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் எனக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது. அதில் நான் குடிசை அமைத்து வசித்து வருகிறேன். இந்த நிலையில் அந்த குடிசையையும் அபகரிக்கும் வகையில் சிலர் என்னை மிரட்டி வருகின்றனர், என்று கூறியிருந்தார்.

குஜிலியம்பாறை தாலுகா லந்தக்கோட்டை ஊராட்சி சாலம்பட்டியை சேர்ந்தவர் கள் கொடுத்த மனுவில், லந்தக்கோட்டை ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.48 லட்சம் முறைகேடு நடந்துள்ளது. மேலும், சாலம்பட்டி ஆதிதிராவிடர் காலனிக்கு தனியாக ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. ஆனால், ஆழ்துளை கிணறு மோட்டார் அறை சாவியை ஒருவர் பறித்து சென்று விட்டார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Next Story