முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள் - உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை


முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள் - உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 20 Jan 2020 10:15 PM GMT (Updated: 20 Jan 2020 5:39 PM GMT)

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள் மீது வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

மசினகுடி, 

முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் புலிகள், காட்டு யானைகள், காட்டெருமைகள், கரடிகள், சிறுத்தைப்புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டு யானைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் புலிகள் காப்பக வனபகுதியில் உள்ள சாலையோரங்களுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. குறிப்பாக மசினகுடி, தெப்பகாடு சாலை, தொரப்பள்ளிகக்கநல்லா சாலையை தினந்தோறும் ஏராளமான யானைகள் கடந்து இடம்பெயர்ந்து சென்று வருகின்றன.

இந்த நிலையில் முதுமலையில் பனி காலம் முடிந்து விரைவில் கோடை காலம் தொடங்க உள்ளது. இதனால் காட்டு யானைகள் அதிக அளவில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வர தொடங்கி உள்ளன. வனப்பகுதியில் உள்ள புற்கள் காய்ந்து வருவதால் சாலை ஓரங்களுக்கு யானைகள் வருவது அதிகரித்து உள்ளது.

அவ்வாறு சாலை ஓரத்திற்கு வரும் யானைகளை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி தொந்தரவு செய்து வருகின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகள் வளர்ப்பு யானைகளின் அருகில் செல்வது போல காட்டு யானை கூட்டங்களின் அருகில் சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கின்றனர். அப்போது ஒருசில காட்டு யானைகள் அவர்களை ஆக்ரோ‌‌ஷத்துடன் துரத்துகின்றன. இதில், காட்டு யானைகள் துரத்தி சுற்றுலா பயணிகள் கீழே விழுந்து உயிர் தப்பி சென்ற சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளது.

இது போன்ற சம்பவங்களால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காட்டு யானைகளிடம் அத்துமீறுபவர்களை வனத்துறையினர் கண்காணிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:- முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் குட்டிகளுடன் சாலை ஓரத்திற்கு உலா வருகின்றன. அப்போது சுற்றுலா பயணிகள் அவற்றின் அருகில் சென்றால் கோபம் அடைந்து தாக்க வரும். முதுமலையில் உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்தவோ, கீழே இறங்கவோ கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து காட்டு யானைகளின் அருகில் சென்று செல்பி எடுத்து வருகிறார்கள்.

காட்டு யானைகளின் அருகே அத்துமீறி செல்பவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story