சாலைபாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


சாலைபாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Jan 2020 10:45 PM GMT (Updated: 20 Jan 2020 5:55 PM GMT)

திருப்பூரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர்,

சாலை பாதுகாப்பு வார விழா நேற்று முதல் வருகிற 27-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை தொடங்கியது. பேரணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது. முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. இதில் காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி விபத்தை தவிர்க்க வேண் டும். சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

துண்டு பிரசுரங்கள்

பின்னர் சாலை விதிமுறைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் கலெக்டர் வழங்கினார். இதில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன், உதவி கமிஷனர் நவீன்குமார், துணை கலெக்டர்(பயிற்சி) விஷ்ணுவர்த்தினி, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குமார்(திருப்பூர் வடக்கு), முருகானந்தன் (திருப்பூர் தெற்கு), தங்கவேல் (தாராபுரம்), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story