மேச்சேரி அருகே நடுரோட்டில் முதியவர் கழுத்தை இறுக்கி கொலை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை


மேச்சேரி அருகே நடுரோட்டில் முதியவர் கழுத்தை இறுக்கி கொலை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Jan 2020 4:30 AM IST (Updated: 21 Jan 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே நடுரோட்டில் முதியவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேச்சேரி,

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே காமனேரியில் இருந்து கோவிலூர் செல்லும் சாலையில் கொண்டமுத்தான் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் நேற்று முன்தினம் இரவில் முதியவர் ஒருவர் முகம், நெற்றியில் வெட்டு காயங்களுடன், கழுத்து இறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் இறந்து கிடப்பதாக சாத்தப்பாடி கிராம உதவியாளர் மாதேஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது.

இதுபற்றி உடனே அவர், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தனுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, முதியவர் கொலை செய்யப்பட்டு நடுரோட்டில் கிடப்பதுடன், அருகில் மோட்டார் சைக்கிள் நிற்பதையும் பார்த்தனர். இந்த கொலை குறித்து கிராம நிர்வாக அலுவலர், மேச்சேரி போலீசில் புகார் செய்தார்.

கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர்

இதையடுத்து மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிள் அருகே இறந்த முதியவரின் செல்போன், ஹெல்மெட் உடைந்து கிடந்தது. மேலும் அருகில் ஆதார்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களும் சிதறி கிடந்தன. அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் இறந்த முதியவர், சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் கம்பர் தெருவில் வசித்து வந்த பாலசுப்பிரமணியம் (வயது 62) என்பது தெரியவந்தது. இவருக்கு கிரிஜா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியம் மட்டும் தனது சொந்த ஊரில் இருந்து சேலத்திற்கு வந்தார்.

தொழிலில் நஷ்டம்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் சேலம் 5 ரோட்டில் உள்ள சிப்காட் மற்றும் கரும்பாலை அருகே ஜல்லிக்கிரஷர் எந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் தொழிலில் திடீரென அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதன் காரணமாக பால சுப்பிரமணியம் பழைய சூரமங்கலத்தில் ஒருவர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அப்போது ஜலகண்டாபுரத்தில் உள்ள ஜோதிடர் ஒருவருடன் பாலசுப்பிரமணியம் பழகி உள்ளார். பின்னர் ஜோதிட நிலையத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

5 பேரை பிடித்து விசாரணை

இந்த நிலையில் பழைய சூரமங்கலத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் தனது மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளதால் ஒரு வாரம் வெளியே தங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஜலகண்டாபுரத்தில் உள்ள அந்த ஜோதிட நிலையம் மற்றும் அங்கு ஜோதிடம் பார்க்க வந்து அறிமுகமான சாத்தப்பாடியை சேர்ந்த ஒரு நண்பரின் வீடு என்று சமீபகாலமாக பாலசுப்பிரமணியம் மாறி, மாறி தங்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மர்ம நபர்களால் பாலசுப்பிரமணியம் நடுரோட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்னாள் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே இந்த கொலை தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடுரோட்டில் முதியவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் மேச்சேரி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story