கைதான 2 பேருக்கும் போலீஸ் காவலுக்கு அனுமதி கிடைக்கும் அரசு வக்கீல் ஞானசேகர் நம்பிக்கை


கைதான 2 பேருக்கும் போலீஸ் காவலுக்கு அனுமதி கிடைக்கும் அரசு வக்கீல் ஞானசேகர் நம்பிக்கை
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 8:12 PM GMT)

சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான 2 பேருக்கும் போலீஸ் காவலுக்கான அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக அரசு வக்கீல் ஞானசேகர் கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஞானசேகர் ஆஜராகி வாதாடினார்.

விசாரணை முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 2 பேரையும் 28 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு துணை சூப்பிரண்டு கணேசன் ஏற்கனவே தாக்கல் செய்த மனு குறித்து எடுத்துரைத்தார்.

அச்சுறுத்தல்

அப்போது அப்துல் சமீம் மற்றும் தவுபிக்கை போலீஸ் காவலில் அனுப்பினால் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், ஏற்கனவே விசாரணை நடைபெற்றதால் 2 பேரையும் கோர்ட்டு காவலில் வைக்க வேண்டும் என்றும் எதிர்தரப்பு வக்கீல் வாதிட்டார். மேலும் அவர், அப்துல் சமீம் மற்றும் தவுபிக்கை காணவில்லை என்றும், கண்டுபிடித்துத்தர கோரி உறவினர்கள் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருப்பதாகவும் கூறினார். இதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்ததோடு ஆட்கொணர்வு வழக்கு தொடர்பான ஆவணங்கள் எதுவும் எனக்கு வரவில்லை என்று வாதிட்டேன்.

பின்னணி

அது மட்டும் அல்லாது கைதான 2 பேரின் பின்னணி? கொலைக்கு உதவியவர்கள்? மற்றும் கொலையில் தொடர்புடைய நபர்கள் யார் யார்? என்று விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதோடு கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட வேண்டி இருக்கிறது. கொலை நடப்பதற்கு முன்னரும், பின்னரும் 2 பேரும் பல இடங்களுக்கு சென்றதால் அப்பகுதிகளுக்கு எல்லாம் 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

எனவே 2 பேரிடமும் விசாரணை நடத்த 28 நாட்கள் தேவை என்று வாதிட்டேன். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போலீஸ் காவல் தொடர்பான உத்தரவை நாளை (அதாவது இன்று) மதியம் 3 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான 2 பேருக்கும் போலீஸ் காவலுக்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story