படப்பை அருகே, வீட்டில் காலி கேனில் இருந்த ரசாயன பொருள் வெடித்து பெண் பலி - போலீசார் விசாரணை


படப்பை அருகே, வீட்டில் காலி கேனில் இருந்த ரசாயன பொருள் வெடித்து பெண் பலி - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Jan 2020 4:15 AM IST (Updated: 21 Jan 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே வீட்டில் காலி கேனில் இருந்த ரசாயன பொருள் திடீரென வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் உள்ள திருமலைநாயக்கர் தெருவில் வசித்து வருபவர் மோகன் (வயது 56). இவரது மனைவி சாந்தி (வயது 45). இந்நிலையில் நேற்று மாலை மோகன் வீட்டில் இருந்த மர்ம பொருள் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த சம்பவத்தின் போது, வீட்டில் இருந்த சாந்தி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சத்தத்தை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ரத்தவெள்ளத்தில் கிடந்த சாந்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனே அப்பகுதி மக்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் உயிரிழந்த சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் துறையை சார்ந்த குழுவினர் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தி தண்ணீர் பிடிப்பதற்காக இரண்டு காலி கேன்களை வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்ததாகவும், இந்நிலையில் நேற்று அந்த கேன்களில் ஒன்றை தண்ணீர் பிடிப்பதற்கு எடுக்கும் போது அதில் இருந்த சிறிதளவு ரசாயனபொருள் திடீரென தீப்பற்றி வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடித்த பொருள் என்ன? இந்த விபத்துக்கு வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story