மாமல்லபுரம் அருகே, கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு


மாமல்லபுரம் அருகே, கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு
x
தினத்தந்தி 21 Jan 2020 4:15 AM IST (Updated: 21 Jan 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் அருகே புதிய கல்பாக்கம் கிழக்கு கடற் கரை சாலையை கடக்க முயன்ற நிறைமாத கர்ப்பிணி, தன் மகனுடன் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதிய கல்பாக்கம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி திலகவதி (வயது 35), நிறைமாத கர்ப்பிணி. நேற்று கோவளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படிக்கும் தன்னுடைய மகன் திருமுருகனை (4) விடுவதற்காக இ.சி.ஆர். சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக திலகவதி அழைத்து சென்றார்.

அப்போது புதிய கல்பாக்கம் இ.சி.ஆர். சாலையில் உள்ள தடுப்புச்சுவர் வளைவு பகுதியை தாயும், மகனும் கடக்க முயன்றனர். அப்போது மாமல்ல புரம் நோக்கி வேகமாக வந்த கார் தாய், மகன் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் சரக உதவி கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தாயும், மகனும் கார் மோதி இறந்த சம்பவ நேரத்தில் சத்தியமூர்த்தி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அவருக்கு வாக்கிடாக்கி மூலம் இருவரும் கார் விபத்தில் இறந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கடலில் இருந்து கரைக்கு திரும்பி வந்து தனது மனைவி, மகனை பார்த்து அழுத காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.

Next Story