தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை கவ்வி சென்ற சிறுத்தை: பொதுமக்கள் பீதி


தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை கவ்வி சென்ற சிறுத்தை: பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 21 Jan 2020 4:06 AM IST (Updated: 21 Jan 2020 4:06 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை, சிறுத்தை கவ்வி சென்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலி, சிறுத்தைகள் உள்ளன. அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து புலி மற்றும் சிறுத்தை வெளியேறி அருகில் உள்ள கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை அடித்து கொன்று வருகிறது.

குறிப்பாக சிறுத்தை ஒன்று கடந்த 1 மாதத்துக்கு முன்பு தாளவாடியை அடுத்த பீம்ராஜ் நகர், சூசைபுரம், தொட்டகாஜனூர் கிராமத்துக்குள் புகுந்து 8 ஆடுகள் மற்றும் 6 நாய்களை கொன்று உள்ளது.

இதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க பீம்ராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூண்டை வனத்துறையினர் வைத்தனர். கூண்டு இருப்பது தெரியாமல் இருப்பதற்காக அதை சுற்றிலும் மரக்கிளைகளை போட்டு மூடி வைத்தனர். மேலும் கூண்டுக்குள் தினம் நாய் அல்லது ஆட்டுக்குட்டி என மாற்றி மாற்றி கட்டி வைத்தனர். அதுமட்டுமின்றி கூண்டு பகுதியை நோக்கி கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி வைத்தனர்.

கூண்டு பகுதிக்கு வந்த சிறுத்தையானது, அதனுள் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் அல்லது ஆட்டை வேட்டையாட முயன்றது. ஆனால் கூண்டுக்குள் செல்லாமல் அதன் பின்புறம் வழியாகவே வேட்டையாட முயன்றது. குறுக்கே கம்பிகள் இருந்ததால் அதனால் முடியவில்லை. எனினும் கூண்டின் திறந்த பகுதி வழியாக அந்த சிறுத்தை உள்ளே சென்று வேட்டையாடவில்லை. இதனால் சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் தப்பித்து வந்தது. தொடர்ந்து 1 மாதமாகவே சிறுத்தை இதுபோன்று நடமாடி வந்தது.

இந்த காட்சிகள் அனைத்தும் வனத்துறையினரால் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. சிறுத்தையின் நடவடிக்கை வனத்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எனினும் கடந்த 1 மாதமாக கிராமத்துக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம் செய்யாமல் இருந்ததால் கிராம மக்களும், வனத்துறையினரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொட்டகாஜனூர் கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அங்குள்ள மக்களை பீதி அடைய வைத்து உள்ளது.

தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் அரங்கசாமி (வயது 46). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. தோட்டத்திலேயே வீடும் உள்ளது. இவர் 5 ஆடுகள் மற்றும் 4 மாடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக வீட்டின் முன்புறம் கொட்டகை கட்டி வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு தன்னுடைய 5 ஆடுகள் மற்றும் 4 மாடுகளை கொட்டகைகயில் கட்டி வைத்து வீட்டுக்குள் தூங்க சென்றுவிட்டார். நேற்று காலையில் எழுந்து வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஒரு ஆட்டை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அங்கு ரத்தம் உறைந்து கிடந்ததை அவர் கண்டார். மேலும் அந்த ரத்தக்கறை சிறிது தூரம் வரை இருந்தது.

அப்போது அங்கு பதிவான கால் தடத்தை பார்த்தபோது அது சிறுத்தையின் கால் தடமாகத்தான் இருக்கும் என கருதினார். அனைவரும் தூங்கிய பின்னர் நள்ளிரவில் கொட்டகைக்குள் சிறுத்தை புகுந்து ஆட்டை கடித்து கொன்றதுடன், அதை கவ்வி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று பதிவான கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அது சிறுத்தையின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். கடந்த 1 மாதத்துக்கு பின்பு மீண்டும் சிறுத்தை கிராமத்துக்குள் புகுந்து ஆட்டை கொன்ற சம்பவம் அந்த பகுதி பொதுமக்களை பீதி அடைய செய்து உள்ளது.


Next Story