கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சல் தடுப்பு போலீசார் துப்பாக்கியுடன் தீவிர ரோந்து


கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சல் தடுப்பு போலீசார் துப்பாக்கியுடன் தீவிர ரோந்து
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 5:31 PM GMT)

கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கியுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் வடகவுஞ்சி வனப் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று, மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர். அப்போது சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டான். மேலும் 2 பெண்கள் உள்பட 7 பேர் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 7 மாவோயிஸ்டுகளையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டதோடு, மலைக்கிராம மக்களை மூளைச்சலவை செய்து மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்க்கவும் முயன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் மீண்டும் ஊடுருவி விடாமல் தடுக்கும் வகையில், நக்சல் தடுப்பு படை அமைக்கப்பட்டது. அந்த நக்சல் தடுப்பு படையினர் கொடைக்கானல் மலைப்பகுதியில் அவ்வப்போது ரோந்து சென்று வருகின்றனர்.

ரோந்து பணி

அதன்பேரில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின்பேரில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசிங் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் வட்டக்கானல் பகுதியில் இருந்து துப்பாக்கியுடன் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு சாலை வசதி இல்லாத வெள்ளகவி கிராமத்தில் தங்கிய அவர்கள், இன்று (புதன்கிழமை) அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து கீழே இறங்கி கும்பக்கரை அருவி பகுதிக்கு செல்கின்றனர். நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணி காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story