சிறுமியை கர்ப்பிணியாக்கிய கொத்தனாருக்கு 12 ஆண்டு சிறை கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியை கர்ப்பிணியாக்கிய கொத்தனாருக்கு 12 ஆண்டு சிறை கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Jan 2020 10:30 PM GMT (Updated: 21 Jan 2020 7:36 PM GMT)

சிறுமியை கர்ப்பிணியாக்கிய கொத்தனாருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர்அகரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 43). கொத்தனார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அடிக்கடி டி.வி. பார்க்க வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த 3.7.2017 அன்று மதியம் 2 மணிக்கு அந்த சிறுமி ரவி வீட்டுக்கு டி.வி. பார்க்க சென்றாள். ஆனால் வீட்டில் ரவியை தவிர, வேறு யாரும் இல்லை.

இதனால் உல்லாசமாக இருக்க அந்த சிறுமியை ரவி அழைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமி, வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்சி செய்தார். உடனே ரவி, சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியில் சொன்னால் என் சாவுக்கு நீ தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

12 ஆண்டு சிறை

இதனால் பயந்து போன சிறுமியை ரவி அடிக்கடி தனது வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானாள். இது பற்றி அறிந்ததும் அந்த சிறுமியின் தாய், நெய்வேலி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரவியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி கருணாநிதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் ரவி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் (பொறுப்பு) செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் வகையில் கடலூரில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது. இதில் விசாரணை முடிந்து வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story