மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த ஆண்டு 25 லட்சம் டன் நெல் கொள்முதல் அமைச்சர் காமராஜ் தகவல் + "||" + 25 lakh tonnes of paddy procurement minister Kamaraj in Tamil Nadu this year

தமிழகத்தில் இந்த ஆண்டு 25 லட்சம் டன் நெல் கொள்முதல் அமைச்சர் காமராஜ் தகவல்

தமிழகத்தில் இந்த ஆண்டு 25 லட்சம் டன் நெல் கொள்முதல் அமைச்சர் காமராஜ் தகவல்
தமிழகத்தில், இந்த ஆண்டு 25 லட்சம் டன் நெல்கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் காமராஜர் கூறினார்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல் கொள்முதல் தொடர்பாக தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள், அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, செல்வராசு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் உணவுத்துறை முதன்மை செயலாளர் தயானந்த்கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி, மாவட்ட கலெக்டர்கள் கோவிந்தராவ்(தஞ்சை), ஆனந்த்(திருவாரூர்), பிரவீன் நாயர்(நாகை) மற்றும் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்கள், வேளாண்மைத்துறை இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

25 லட்சம் டன்

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு இதுவரை 455 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 67 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 87 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் கொள்முதல் செய்யும் பணி முழுவீச்சை அடையும்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் 1,766 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இவற்றில் 19.10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு விளைச்சல் அதிகம் என்பதால் 25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு அரசும் தயாராக இருக்கிறது.

கடும் நடவடிக்கை

இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகளை ஆய்வு செய்து நிவர்த்தி செய்யப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் விவசாயிகளிடம் இருந்து எந்தவித புகாரும் வராமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புகாருக்கு உள்ளாகும் நபர்கள் மீது விசாரணை நடத்தி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் நாள்தோறும் 800 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரப்பத பிரச்சினை

இப்போது வெயில் நிலவுவதால் நெல்லில் ஈரப்பத பிரச்சினை இல்லை. அவ்வாறு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஈரப்பத விதியை தளர்த்துவது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து பதில் வந்து கொண்டிருக்கிறது. எனவே ஈரப்பத விதி விரைவில் தளர்த்தப்படும்.

நாங்கள் 2011-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது குவிண்டாலுக்கு ரூ.1,080 என நெல் கொள்முதல் விலை இருந்தது. இப்போது, கிட்டத்தட்ட ரூ.2 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இதை மேலும் உயர்த்துமாறு மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். தமிழக அரசு சன்ன ரகத்துக்கு ரூ. 70-ம், சாதாரண ரகத்துக்கு ரூ.50-ம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இந்த வகையில் 2011-ம் ஆண்டில் இருந்து ரூ.718 கோடியை தமிழக அரசு ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

பின்னர் அமைச்சர் காமராஜ் தஞ்சை அருகேயுள்ள மடிகை, காட்டூரில் உள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மூட்டைகளின் எடை, நெல்லின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும்
சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா 28-ந்தேதி தொடங்குகிறது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
3. வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இல்லாதவாறு கண் காணிக்க வேண்டும் என உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர் சவான் கூறினார்.
4. கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் விற்பதை தடுப்பது குறித்த கருத்துகேட்பு கூட்டம்
கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் விற்பதை தடுப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
5. தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு அட்டை வழங்குவதில் முறைகேடு
தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலைக்கான அட்டை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.