கேரள-தமிழ்நாடு சோதனைச்சாவடிகளில் கர்நாடக போலீசார் தீவிர வாகன சோதனை மங்களூருவில் வெடிகுண்டுகள் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து நடவடிக்கை
கேரள-தமிழ்நாடு சோதனைச்சாவடிகளில் கர்நாடக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். மங்களூருவில் வெடிகுண்டுகள் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொள்ளேகால்,
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வெடிகுண்டுகள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று வெடிக்க செய்து செயலிழக்க வைக்கப்பட்டது. மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சோதனைச்சாவடிகளில் சோதனை
இந்த நிலையில், தமிழ்நாடு-கர்நாடகம் மற்றும் கேரளா-கர்நாடகம் எல்லைப்பகுதியான சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் உள்ள தமிழ்நாடு-கர்நாடக சோதனைச்சாவடி, குண்டலுபேட்டையில் உள்ள கேரளா-கர்நாடக சோதனைச்சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த சோதனைச்சாவடிகளில் கர்நாடக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் கர்நாடக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாடு, கேரளாவுக்கு செல்லும் வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு பணிகள் தீவிரம்
இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த்குமார் கூறுகையில், மங்களூருவில் வெடிகுண்டுகள் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து சாம்ராஜ்நகர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியாக யாராவது சுற்றித்திரிந்தாலோ அல்லது பொருட்கள் ஏதாவது கிடந்தாலோ பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story