ஈரோடு மீன் மார்க்கெட் அருகே கழிவுகளில் பற்றி எரிந்த தீ கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு


ஈரோடு மீன் மார்க்கெட் அருகே கழிவுகளில் பற்றி எரிந்த தீ கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Jan 2020 4:00 AM IST (Updated: 22 Jan 2020 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மீன் மார்க்கெட் அருகே கழிவுகளில் பற்றி எரிந்த தீயில் இருந்து கரும்புகை வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். மீன் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் அருகில் செல்லும் பெரும்பள்ளம் ஓடையில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் ஓடை மாசடைந்து வந்ததையடுத்து ஸ்டோனி பாலத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் கம்பி வேலி அமைக்கப்பட்டது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல், பலர் பாலத்தின் ஓரமாக ஓடையில் கழிவுகளை கொட்டுகிறார்கள். இந்த கழிவுடன் மீன்கள் கொண்டு வரப்பட்ட தெர்மாகோலையும் வீசுகின்றனர்.

கரும்புகை

இந்தநிலையில் ஸ்டோனி பாலத்தில் கொட்டப்பட்ட குப்பையில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. அங்கு தெர்மாகோல் அதிகமாக கிடந்ததால் தீ மளமளவென பரவியது. இதைத்தொடர்ந்து உயரமாக கரும்புகை வெளியேறியதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும், பாலத்தின் வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும் பயத்தை உருவாக்கியது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு நிலைய அதிகாரி மயில்ராஜூ தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு பற்றி எரிந்த தீயை சுமார் அரை மணிநேரம் போராடி அணைத்தார்கள்.

டிரான்ஸ்பார்மர்

இதுகுறித்து அந்த பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “ஸ்டோனி பாலம் அருகில் கொட்டப்படும் குப்பையில் மர்மநபர்கள் தீ வைத்து விடுகிறார்கள். கடந்த 2 மாதத்தில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் குப்பைகளை கொட்டுவதை வியாபாரிகளும் நிறுத்தி கொள்ளவில்லை. அதிகாரிகளும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீ விபத்து ஏற்படுவதற்கு அருகில் மின்சாரத்துறையின் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அடிக்கடி பற்றி எரியும் தீயினால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஸ்டோனி பாலத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர். ஸ்டோனி பாலத்தில் பற்றி எரிந்த தீயில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story