நடிகர் ரஜினிகாந்துக்கு இந்து முன்னணி ஆதரவு தமிழ்மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி


நடிகர் ரஜினிகாந்துக்கு இந்து முன்னணி ஆதரவு தமிழ்மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 9:59 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் உண்மையான கருத்தை தெரிவித்துள்ளார். அவருக்கு இந்து முன்னணி தனது ஆதரவை தெரிவித்து கொள்கிறது என்று தமிழ்மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் உள்ள செகா கலைகூடத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் சனில்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., துணை தலைவர் ஏம்பலம் செல்வம், முன்னாள் தலைவர் கேசவலு மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் இந்து முன்னணியின் தமிழ்மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஜினிகாந்துக்கு ஆதரவு

புதுவை மாநிலத்தில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்து வந்துள்ளது. ஆனால் புதுவை பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. புதுச்சேரி சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. தற்போது புதுவை மாநிலத்தின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. உதாரணமாக தற்போது கேசினோ எனும் சூதாட்ட கிளப் கொண்டு வர முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆன்மிக பூமியான புதுவையில் இதனை கொண்டு வருவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. கேசினோ கொண்டு வரும் திட்டத்தை புதுவை அரசு கைவிட வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஒரு உண்மையான கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அவரை மிரட்டி வருகிறது. ஆனால் அதற்கு பயப்படாமல் அவர் யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறியுள்ளார். அவருக்கு இந்து முன்னணி ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

கஞ்சா விற்பனை

புதுவை மாநிலத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் இளைஞர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார். அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் மக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. இந்த சட்டம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story