விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் ஆட்டோ டிரைவருக்கு பொருத்தப்பட்டது


விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் ஆட்டோ டிரைவருக்கு பொருத்தப்பட்டது
x
தினத்தந்தி 22 Jan 2020 4:30 AM IST (Updated: 22 Jan 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதயம் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ டிரைவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

சென்னை,

கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திடீரென இதயத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, இவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, மகேந்திரனுக்கு இதயத்தில் உள்ள அனைத்து வால்வுகளும் பழுதடைந்து, இதயம் செயலிழந்திருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி மேற்பார்வையில், டாக்டர்கள் ஜோசப்ராஜ், வெள்ளிங்கிரி தலைமையில் மகேந்திரனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டனர்.

இதய மாற்று அறுவை சிகிச்சை

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயத்தை, அவரது உறவினர்களின் சம்மதத்துடன் தானமாக பெறப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மகேந்திரனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

மிகவும் ஆபத்தான நிலையில் மகேந்திரன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருந்தது. இதையடுத்து அவருக்கு கடந்த 5-ந்தேதி முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.35 முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும். இது இந்த ஆண்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை ஆகும். இது வரை 11 இதய மாற்று அறுவை சிகிச்சை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story