ரெயில்வே அதிகாரியின் மகனை ரூ.10 லட்சம் கேட்டு கடத்திய வாலிபர் கைது


ரெயில்வே அதிகாரியின் மகனை ரூ.10 லட்சம் கேட்டு கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 10:28 PM GMT)

வில்லிவாக்கம் அருகே ரெயில்வே அதிகாரியின் மகனை ரூ.10 லட்சம் கேட்டு கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 39). இவர் தெற்கு ரெயில்வேயில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மூத்த மகன் சஞ்சய் (14). இவன் புழல் அடுத்த சூரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

சஞ்சய் நேற்று முன்தினம் இரவு வில்லிவாக்கம் அனுசுயா நகரில் உள்ள டியூசனுக்கு சென்றான். டியூசன் முடித்துவிட்டு வெகுநேரமாகியும் சஞ்சய் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவனது தந்தை வினோத் குமார் டியூஷன் படிக்கும் இடத்திற்கு சென்று விசாரித்தார். ஆனால் அவர்கள் சஞ்சய் கிளம்பி விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சஞ்சய் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினார். தனது மகன் சஞ்சய் எங்கு தேடியும் கிடைக்காததையடுத்து, நேற்று ராஜமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

சிறுவனிடம் விசாரணை

இந்த நிலையில் நேற்று காலை புழல் அடுத்த சூரப்பட்டு சண்முகபுரம் அருகே சஞ்சய் நின்று கொண்டு இருந்துள்ளான். அங்கு நின்ற ஆட்டோ டிரைவரிடம் போலீஸ் நிலையத்துக்கு எப்படி செல்ல வேண்டும்? என கேட்டுள்ளான். மேலும் தன்னை சிலர் கடத்தி விட்டதாக அவரிடம் சஞ்சய் தெரிவித்துள்ளான். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் அம்பத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையறிந்த உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சஞ்சய் தன்னை ஒருவர் காரில் கடத்தி சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து இருந்ததாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் தன்னை விடுவேன் என்று கூறி மிரட்டியதாகவும் என தெரிவித்தான்.

அதன்பின்னர், அங்கிருந்து நைசாக தப்பித்து வந்து விட்டதாகவும் கூறினான். பின்பு போலீசார் சஞ்சயை மீட்டு, அவனை அடைத்து வைத்திருந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

கார் டிரைவர் கைது

அந்த வீட்டில் வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம் மசூதி தெருவைச் சேர்ந்த கார் டிரைவரான லோகேஸ்வரன் (28), என்பது தெரியவந்தது.

பின்பு போலீசார் லோகேஸ்வரனிடம் நடத்திய விசாரணையில், அவர் டியூசன் படித்து விட்டு வெளியே வந்த சஞ்சயை தனது நண்பரின் காரில் வந்து கடத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்து அறை ஒன்றில் அடைத்து வைத்து சஞ்சயின் தந்தை வினோத்குமாரிடம் ரூ.10 லட்சம் கேட்க சொல்லி மிரட்டியதையும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து, குடிபோதையில் லோகேஸ்வரன் தூங்கி விட்டதால் சஞ்சய் அவரிடம் இருந்து தப்பித்து வந்ததாகவும் லோகேஸ்வரன் போலீசாரிடம் தெரிவித்தார்.

பின்பு அம்பத்தூர் போலீசார் லோகேஸ்வரனை ராஜமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சஞ்சயை, வினோத்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட கார் டிரைவரான லோகேஸ்வரனை கைது செய்து தீவிர விசாரணை செய்துவருகிறார். 

Next Story