பஞ்சாயத்து தலைவர்கள் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாலமாக இருக்க வேண்டும் கலெக்டர் பேச்சு


பஞ்சாயத்து தலைவர்கள் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாலமாக இருக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2020 4:30 AM IST (Updated: 22 Jan 2020 8:14 PM IST)
t-max-icont-min-icon

கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பாலமாக இருந்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அறிமுக விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் அறிமுக விழா மற்றும் பயிற்சி கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரோட்டரி கம்யூனிட்டி சென்டரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் மற்றும் குருந்தன்கோடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்களும், துணை தலைவர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். பின்னர் கிராம பஞ்சாயத்து தலைவர்களும், துணை தலைவர்களும் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகளை கலெக்டர் எடுத்துரைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பாலமாக....

உள்ளாட்சி அமைப்புகளில் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகள் மிகவும் முக்கியமானவை ஆகும். கிராமங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ஜனநாயகம் இருக்கும். ஒவ்வொரு கிராமங்களிலும் மக்களின் பிரச்சினைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? என்பது பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு தான் அதிகம் தெரிந்திருக்கும். மக்களின் பிரச்சினைகளில் பஞ்சாயத்து தலைவருக்கும் பங்கு உண்டு.

எனவே கிராம பஞ்சாயத்து தலைவர்களும், துணை தலைவர்களும் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாலமாக இருந்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண் டும். மக்கள் சந்தோசமாக இருக்க பணியாற்றுவது அவசியம். நீங்கள் செய்யும் பணிகளால் 5 ஆண்டுகளுக்கு பிறகும் உங்களை மக்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். பிற மாவட்டங்களை காட்டிலும் குமரி மாவட்டத்தில் அதிக பிரச்சினைகள் இருந்தாலும், அதை தீர்ப்பதில் பிற மாவட்டங்களுக்கு குமரி மாவட்டம் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தக்கலை- திருவட்டார்

தக்கலை, திருவட்டார், மேல்புறம், கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கும், துணை தலைவர்களுக்கும் அறிமுக விழா மற்றும் பயிற்சி கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. 

Next Story