ரஜினிகாந்த் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை - ஈரோட்டில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி


ரஜினிகாந்த் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை - ஈரோட்டில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
x
தினத்தந்தி 22 Jan 2020 10:45 PM GMT (Updated: 22 Jan 2020 4:23 PM GMT)

ரஜினிகாந்த் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஈரோடு, 

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஈரோட்டில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு தொழில் வகைகளை ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு பிரிவுகளாக பிரித்துள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள தொழில்களை மேற்கொள்ளும்போது பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதியும் பெற வேண்டும் என்று அரசாணை உள்ளது. இந்தநிலையில் தற்போது எண்ணெய் கிணறு தோண்டும் தொழிலை ‘பி’ கிரேடுக்கு அரசு மாற்றி விட்டதால், பொதுமக்கள் கருத்து கேட்க வேண்டியதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும், இந்த திட்டத்தை கொண்டு வர அரசின் சுற்றுச்சூழல்துறை அனுமதி பெற வேண்டும். இந்த துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டமாக இருந்தாலும் அரசு அதனை தடுத்து நிறுத்தும்.

சாயக்கழிவு பிரச்சினையை பொறுத்தவரை திருப்பூரில் உள்ளது போல் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்த ஈரோட்டில் 5 இடங்களும், பவானியில் 2 இடங்களும் என 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்குகிறது. 25 சதவீத மானியம் மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 25 சதவீதத்தை சாயப்பட்டறை உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.

அவர்கள் அந்த தொகையை செலுத்த சிரமமாக உள்ளதாக தெரிவித்து இருப்பதால், சுற்றுச்சூழல் துறை சார்பில் அந்த தொகையை வட்டியில்லா கடனாக கொடுத்து திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இந்த திட்டத்துக்கு முதல்-அமைச்சர் விரைவில் ஒப்புதல் வழங்குவார்.

ரஜினிகாந்த் பேச்சு எடுபடப்போவதில்லை. அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் சரியான முடிவை எடுப்பார்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

Next Story