திருச்சி திறந்தவெளி சிறையில் கைதிகள் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் சிறை அங்காடியில் விற்பனைக்கு வந்தது


திருச்சி திறந்தவெளி சிறையில் கைதிகள் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் சிறை அங்காடியில் விற்பனைக்கு வந்தது
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 4:50 PM GMT)

திருச்சி திறந்தவெளி சிறையில் கைதிகள் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் சிறை அங்காடியில் விற்பனைக்கு வந்தது.

திருச்சி,

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரத்தில் திருச்சி மத்திய சிறை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு ஆர்வமான தொழிலில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

சிறையில் வளாகத்தில் உள்ள அட்டைகள் தயார் செய்யும் ஆலை, சலவை சோப்பு-வாசனை சோப்புகள் தயாரிக்கும் பணி மற்றும் திறந்த வெளியில் பல ஏக்கர் களில் வேளாண் விளை பொருட்களையும் கைதிகளை கொண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகளால் 40 ஆயிரம் எண்ணிக்கையில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு அவை, அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புக்கு வினியோகிக்க அறுவடை செய்யப்பட்டது.

சின்ன வெங்காயம்

மேலும் திறந்த வெளி சிறையில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும், அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயமும் கைதிகளால் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சின்ன வெங்காயம் நன்கு விளைந்த நிலையில், அவை நேற்று அறுவடை செய்யப்பட்டன. சிறை கண்காணிப்பாளர் சங்கர், சிறை அங்காடி கண்காணிப்பாளர் திருமுருகன் முன்னிலையில் ½ ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை கைதிகள் அறுவடை செய்தனர்.

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் சங்கர் கூறியதாவது:-

அங்காடியில் விற்பனை

சிறையில் நன்னடத்தை அடிப்படையில் 20 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, அதுவும் விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து வேளாண் தொழிலில் ஈடு படுத்தி வந்தோம். ஏற்கனவே கரும்பு சாகுபடி செய்யப்பட்டு அவை பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்யப்பட்டன. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் ½ ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து கைதிகள் பராமரித்து வந்தனர். அவை நன்கு விளைந்து விட்டதால், அவற்றை அறுவடை செய்து பொதுமக்கள் நலன்கருதி வெளிச்சந்தையை விட குறைவான விலையில் ஒரு கிலோ ரூ.80-க்கு சிறை அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் விற்பனையில் கிடைக்கும் லாபத்தொகையில் இருந்து, அவற்றை சாகுபடி செய்து பராமரித்த சிறைவாசிகளுக்கு ஊதியமும், சிறைவாசிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதியாகவும் வழங்கப்படும். பயிரிடப்பட்ட சின்ன வெங்காயத்திற்கு முழுக்க முழுக்க மண்புழு உரம் மற்றும் கால்நடை கழிவுகளே உரமாக பயன்படுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story