நெல் கொள்முதலில் முறைகேடு செய்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை


நெல் கொள்முதலில் முறைகேடு செய்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Jan 2020 4:30 AM IST (Updated: 22 Jan 2020 10:38 PM IST)
t-max-icont-min-icon

நெல்கொள்முதலில் முறைகேடு செய்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் வடுவூரில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை அமைச்சர் காமராஜ், உணவுத்துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி, திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் ஆகியோருடன் ஆய்வு செய்தனர். அப்போது நெல்லின் தரம் மற்றும் நெல் மூட்டைகளில் எடை ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

எந்த புகாரும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதலில் முறைகேடு கண்டறியப்பட்டால் ஊழியர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த பகுதி விவசாயிகளின் நெல்லை மட்டும் கொள்முதல் செய்வதற்காகவே பட்டா மற்றும் சிட்டா அவர்களிடம் கேட்கப்படுகிறது. இருப்பினும் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை எந்த பிரச்சினையும் இன்றி கொள்முதல் செய்ய உத்திரவிட்டுள்ளோம். டெல்டா மாவட்டங்களுக்கு, வெளி மாவட்டத்தில் இருந்து நெல் அறுவடை எந்திரங்கள் அரசு தரப்பில் இருந்தும், தனியார் தரப்பில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. சில நாட்களில் அனைத்து பகுதிகளிலும் ஒருநேரத்தில் அறுவடை செய்ய வசதியாக போதுமான எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை செய்ய வசதி செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story