நெல்லை அருகே கொன்று புதைப்பா? வாலிபர் உடலை இன்று தோண்டி எடுக்க போலீசார் முடிவு - உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு


நெல்லை அருகே கொன்று புதைப்பா? வாலிபர் உடலை இன்று தோண்டி எடுக்க போலீசார் முடிவு - உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 4:30 AM IST (Updated: 22 Jan 2020 11:16 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வாலிபர் கொன்று புதைக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து வாலிபர் உடலை இன்று தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு சுந்தராபுரத்தை சேர்ந்த சுடலைமுத்து மகன் மாசானமூர்த்தி (வயது 29). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கிருஷ்ணவேணி (வயது 24) என்ற மனைவியும், வர்மன் (3) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 15-ந்தேதி பொங்கல் விழா அன்று வீட்டில் இருந்த மாசானமூர்த்தி தனது நண்பர்களுடன் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது மோட்டார் சைக்கிளும் காணவில்லை. செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் மாசானமூர்த்தியை உறவினர்கள் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாசானமூர்த்தியின் தந்தை சுடலைமுத்து, தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், மாசானமூர்த்தி மாயமானதாக வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.

மாசானமூர்த்தியின் மனைவி கிருஷ்ணவேனி தனது 3 வயது மகன் மற்றும் உறவினர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கலெக்டர் ஷில்பாவிடம் மனு கொடுத்தார். அதில், தனது கணவரை விரைந்து கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் போலீசார் மாசானமூர்த்தி வழக்கமாக செல்லும் இடங்களுக்கு சென்று தேடி பார்த்தனர். அந்த பகுதியில் உள்ள கிணறு, குளங்களில் மோட்டார் சைக்கிள் கிடக்கிறதா? என போலீசார் பார்த்தனர். அவரை பற்றிய முக்கிய தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என சோதனை செய்தனர்.

அப்போது வேப்பங்குளம் ரோட்டில் உள்ள ஒரு கிணற்றில் பெட்ரோல் மிதந்தது தெரியவந்தது. அந்த கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அதன் அடியில் கிடக்கும் பொருட்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி தடயம் ஏதாவது இருக்கிறதா? என சோதனை செய்தனர். அப்போது அங்கு ஓரிடத்தில் 6 அடி நீளத்துக்கு குழி தோண்டப்பட்டு புதிதாக மணல் போடப்பட்டு மூடிய தடயம் தெரிந்தது. மேலும் அந்த பகுதியில் இருந்து துர்நாற்றமும் வீசியது.

எனவே மாசானமூர்த்தியை மர்மநபர்கள் கொன்று அந்த இடத்தில் புதைத்து இருக்கலாமா? என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த இடத்தை தோண்டி பார்த்தால் தான் உடல் எதுவும் புதைக்கப்பட்டு இருக்கிறதா? என்பது தெரியவரும்.

இதுகுறித்து நெல்லை தாசில்தார் ராஜேசுவரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த இடத்துக்கு சென்று பார்த்தார். அந்த பகுதியில் உள்ள குழியை போலீசார் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) தோண்டி உடலை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதையறிந்த அந்த பகுதி பொதுமக்கள் வேப்பங்குளம் ரோட்டில் உள்ள பகுதியில் குவிந்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மாசானமூர்த்தி மனைவி கிருஷ்ணவேணி, அவரது உறவினர்கள் மற்றும் கரையிருப்பை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சென்று நெல்லை-மதுரை மெயின் ரோட்டில் நேற்று மதியம் 2.30 மணியளவில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் தலைமையில் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

துணை கமிஷனர் சரவணன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், “மாசானமூர்த்தி கடந்த 15-ந்தேதி முதல் மாயமானார். இதுவரை அவரை கண்டுபிடிக்கவில்லை. வேப்பங்குளம் பகுதியில் உடலை புதைத்து இருப்பதற்கான தடயம் இருப்பதாக கூறுகிறார்கள். மாசானமூர்த்தி கொன்று புதைக்கப்பட்டாரா? அப்படியென்றால் அவரை கொலை செய்தது யார்? இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்“ என்று கூறினர். அவர்களிடம் துணை கமிஷனர் சரவணன் கூறுகையில், “போலீசார் சந்தேகப்படும் இடத்தில் இன்று (வியாழக்கிழமை) தோண்டப்படும். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக நெல்லை- மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள், கார்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Next Story