கவர்னர் மாளிகைக்கு கைதி மிரட்டல்: சிறை காவலர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் - சிறைத்துறை ஐ.ஜி. உத்தரவு


கவர்னர் மாளிகைக்கு கைதி மிரட்டல்: சிறை காவலர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் - சிறைத்துறை ஐ.ஜி. உத்தரவு
x
தினத்தந்தி 23 Jan 2020 4:15 AM IST (Updated: 22 Jan 2020 11:59 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் மாளிகைக்கு கைதி செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிறைக்காவலர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 19-ந்தேதி மர்ம நபர் ஒருவர் போனில் பேசி கவர்னர் மாளிகைக்கும், ரெயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அதே நபர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் மிரட்டல் விடுத்தார். இந்த செல்போன் அழைப்பு எங்கிருந்து வந்தது? என்பது குறித்து விசாரித்ததில் புதுவை சிறையில் இருந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து புதுவை போலீசார் சிறைக்கு சென்று கைதிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது கார் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் விசாரணை கைதியான டெல்லியை சேர்ந்த நித்தீஷ்சர்மா என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. மற்ற கைதிகள் தன்னை அடித்து துன்புறுத்தியதால் சிறைக்குள் செல்போன் நடமாட்டம் குறித்து காட்டிக்கொடுக்க அவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சிறைக்குள் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 11 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பிரபல ரவுடிகளான மடுவுபேட் சுந்தர், டிராக் சிவா, அருள்பாண்டி உள்ளிட்டோர் இந்த செல்போன்களை பயன்படுத்தியது தெரியவந்தது.

சிறையில் இருந்தபடி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இந்த சம்பவம் புதுவை அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறைத்துறை ஐ.ஜி. பங்கஜ்குமார் ஜா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் அதிகாரிகளை அழைத்து முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

போலீசார் மற்றும் சிறை காவலர்களின் ஒத்துழைப்பின்றி சிறைக்குள் செல்போன்களை கொண்டு செல்ல இயலாது என்பதால் இதற்கு காரணமான போலீசார் மற்றும் சிறைக்காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி சிறைக்காவலர்களான சபரி, ராமச்சந்திரன், சீனு, சங்கர், குருநாதன், சேகர், சுரேஷ் ஆகிய 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை ஐ.ஜி. பங்கஜ்குமார் ஜா உத்தரவிட்டுள்ளார். சிறைக்காவலர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சிறையில் போலீசாரும் காவல்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரும் கைதிகள் சிறைக்குள் செல்போன் எடுத்து செல்ல உதவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக போலீசார் மீதும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கவர்னர் மாளிகை, ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்து எடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் போலீஸ் வட்டாரத்தை கலங்கடித்துள்ளது.

Next Story