திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 Jan 2020 10:45 PM GMT (Updated: 22 Jan 2020 6:52 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. படித்துவிட்டு வேலை வாய்ப்பு வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் காத்திருக்கும் இளைஞர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத பதிவு தாரர்களுக்கு மாதம் ரூ.200 உதவித்தொகையும், 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த பதிவுதாரர்கள் மாதம் ரூ.300 உதவித்தொகையும், 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த பதிவுகளுக்கு மாதம் ரூ.400 உதவித்தொகையும், பட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.600 உதவித்தொகையும் வழங்கப்படுகின்றது.

மேற்கூறிய உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து பதிவை புதுப்பித்து 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு வயது வரம்பு 40, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வயது 45-க்குள் இருக்க வேண்டும். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டுக்கு மேல் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு குறைவான கல்வி தகுதி உடையவர்களுக்கு மாதம் ரூ.600, 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்படிப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் குடும்ப ஆண்டு வருமானம் மற்றும் உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை. மேற்கூறிய தகுதியும் உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து விண்ணப்பபடிவம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் போன்ற விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story