சூனாம்பேடு அருகே, உப்பள தொழிலாளர்கள் போராட்டம்
சூனாம்பேடு அருகே, உப்பள தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அடுத்த வில்லிபாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான உப்பள நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை நிரந்தர தொழிலாளர்களாக நியமித்து ஊதியம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று சூனாம்பேடு பஸ் நிறுத்தத்தில் உப்பள தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சங்கத்தலைவர் உமாநாத் தலைமையில் சித்தாமூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் சேகர் முன்னிலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக செய்யூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அரசு, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சங்கர், வட்ட செயலாளர் ரவி, இந்திய வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் முறைசாரா வட்டச் செயலாளர் கோவிந்தசாமி, கட்டுமான சங்கத்தலைவர் மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த தர்ணா போராட்டத்தில் ஊழியர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்த வேண்டும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்திய படி ஊதியம் வழங்க வேண்டும். சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story