ஆதித்யாராவுடன் எங்களுக்கு எந்ததொடர்பும் இல்லை சகோதரர் அக்‌ஷத் ராவ் பரபரப்பு பேட்டி


ஆதித்யாராவுடன் எங்களுக்கு எந்ததொடர்பும் இல்லை   சகோதரர் அக்‌ஷத் ராவ் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2020 4:15 AM IST (Updated: 23 Jan 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

ஆதித்யாராவின் செயல்பாடுகள் பிடிக்காததால் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டோம் என்றும், அவருடன் கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவரது சகோதரர் அக்‌ஷத் ராவ் தெரிவித்துள்ளார்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அருகில் முக்கிய பிரமுகர்களின் கார்கள் நிறுத்தப்படும் இடத்தில் கடந்த 20-ந்தேதி வெடிகுண்டு இருந்த பையை ஆட்டோவில் வந்த மர்மநபர் வைத்து விட்டு சென்றார். இது உடனே கண்டுபிடிக்கப்பட்டதால், அதை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி பாதுகாப்பாக செயலிழக்க வைத்தனர்.

இதுதொடர்பாக பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக உடுப்பி மாவட்டம் மணிப்பாலை சேர்ந்த ஆதித்யாராவ் என்பவர் நேற்று பெங்களூருவில் உள்ள கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

சகோதரர் பேட்டி

இதுகுறித்து கைதான ஆதித்யாராவின் சகோதரர் அக்‌ஷத் ராவ் நிருபர்களிடம் கூறிய தாவது:-

ஆதித்யாராவ் எனது மூத்த சகோதரர் ஆவார். கடந்த முறை அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அப்போதில் இருந்து அவருடன் நாங்கள் யாரும் தொடர்பில் இல்லை. எங்கள் தந்தையும் வீட்டுக்கு வராதே என்று அவரிடம் கூறிவிட்டார். அவர் இளம் வயதில் நன்றாக தான் இருந்தார். தற்போது அவர் குற்றவாளியாகிவிட்டார்.

அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போது அவருக்கு அறிவுரை கூறினோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டோம். அவருடன் நாங்கள் எந்த தொடர்பிலும் இல்லை. நாங்கள் வேலை பார்த்து உழைத்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். அவருடைய செயலுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. கடந்த 2 ஆண்டுகளாகவே நாங்கள் அவருடன் தொடர்பில் இல்லை. அவரிடம் இருந்து பிரிந்து தான் நாங்கள் வாழ்கிறோம்.

நடவடிக்கைகள் பிடிக்காததால்...

மணிப்பால் தான் எங்களது சொந்த ஊர். நாங்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் மங்களூருவுக்கு குடிபெயர்ந்தோம். இளம் வயதில் ஆதித்யாராவ் சரியாக தான் இருந்தார். நான் 8-ம் வகுப்பு முதல் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தேன். அவரும் என்னுடன் விடுதியில் தங்கி படித்து வந்தார். எங்கள் குடும்பத்தில் ஏதாவது நிகழ்ச்சி நடந்தால், அப்போதெல்லாம் நாங்கள் ஒன்றாக கலந்துகொள்வோம்.

ஆதித்யா ராவ் எம்.பி.ஏ. மற்றும் பி.இ. என்ஜினீயரிங் முடித்துள்ளார். சமீபகாலமாக அவரது செயல்பாடுகள் சரியில்லை. அவரை நல்வழிப்படுத்த தந்தை முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அவரது நடவடிக்கைகள், செயல்பாடுகள் பிடிக்காததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டோம். கடந்த 2 ஆண்டுகளாக அவருடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.

தாயின் இறுதிச்சடங்கிற்கு வரவில்லை

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எங்கள் தாய் மரணம் அடைந்தார். அதனால் மூத்த மகன் என்ற முறையில் இறுதிச்சடங்குகள் நடத்த அவரை நான் செல்போனில் தொடர்பு கொண்டேன். அப்போது அவர் சிக்பள்ளாப்பூர் சிறையில் இருந்தார். சிறை வார்டனிடம் நாங்கள் தாய் இறந்தது பற்றி தகவல் தெரிவித்தோம்.

ஆனால் ஆதித்யாராவ் தாயின் இறுதிச்சடங்கிற்கு கூட வரவில்லை. அதனால் நான் தான் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்தேன். அதில் இருந்து அவரை பற்றியும், அவரது செயல்பாடுகள் பற்றியும் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் அவருக்கு நாங்கள் எந்த உதவியும் செய்யமாட்டோம்.

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்போம்

அதே வேளையில் போலீசார் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். ஆதித்யாராவை ஜாமீனில் எடுக்க ஏற்கனவே எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதுபோல் தற்போதும் அவருக்கு நாங்கள் உதவி செய்யப்போவதில்லை. அவரால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே போலீசார் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story