படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் விரக்தியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார் கைதான என்ஜினீயர் ஆதித்யா ராவ் பற்றி பரபரப்பு தகவல்கள்


படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால்   விரக்தியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்   கைதான என்ஜினீயர் ஆதித்யா ராவ் பற்றி பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 8:23 PM GMT)

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் விரக்தியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என கைதான என்ஜினீயர் ஆதித்யா ராவ் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைத்ததாக உடுப்பி மாவட்டம் மணிப்பால் அருகே கே.எச்.பி. காலனியை சேர்ந்த ஆதித்யா ராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பற்றி போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

கைதான ஆதித்யாராவ் மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆவார். மேலும் இவர், எம்.பி.ஏ. பட்டதாரியும் ஆவார். ஆதித்யா ராவின் முழு பெயர் பம்பாா் ஆதித்யா ராவ் ஆகும். அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் சகோதரர் அக்‌ஷத் ராவ் ஆவார்கள். அவர்கள் 2 பேரும் வங்கிகளில் உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு உடுப்பியில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்த ஆதித்யா ராவ், எம்.ஜி.ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றியுள்ளார். 3 ஆண்டுக்கும் மேலாக அந்த வங்கியில் பணியாற்றிவிட்டு, மற்றொரு வங்கியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அந்த தனியார் வங்கியில் பணியாற்றிய மூத்த அதிகாரியுடன் ஏ.சி. போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதால், வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதன்பிறகு, பெங்களூருவில் சில தனியார் நிறுவனங்களில் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த வேலை பிடிக்காததால் உடுப்பிக்கு சென்று ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும், தனியார் நிறுவனத்திலும் காவலாளியாக வேலை செய்திருக்கிறார். பின்னர் உடுப்பியில் உள்ள ஒரு மடத்தில் சமையல்காரராகவும் ஆதித்யா ராவ் வேலை செய்து உள்ளார்.

காவலாளி வேலை கிடைக்காததால்...

இதற்கிடையில், கடந்த 2018-ம் ஆண்டு மீண்டும் பெங்களூருவுக்கு வந்து தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். பின்னர் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் காவலாளி வேலைக்கு ஆதித்யா ராவ் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவர் என்ஜினீயரிங், எம்.பி.ஏ. படித்திருந்ததால் காவலாளி வேலைக்கு விமான நிலைய அதிகாரிகள் எடுக்கவில்லை. அந்த வேலைக்காக ஆதித்யா ராவ் அளித்திருந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஆதித்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இருந்த விமானங்களிலும், விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்திலும் வெடிகுண்டு இருப்பதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் பெங்களூருவில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள் 5 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றிருந்தது.

9 மாதம் சிறைவாசம்

இந்த மிரட்டல் வந்த செல்போன் எண் மூலம் ஆதித்யா ராவை தேவனஹள்ளி விமான நிலைய ேபாலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விமான நிலையத்தில் தனக்கு காவலாளி வேலை கொடுக்காததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் ஆதித்யா ராவ் கூறி இருந்தார். இந்த வழக்கில் சிக்பள்ளாப்பூர் சிறையில் 9 மாதங்களுக்கும் மேலாக அவர் சிறைவாசம் அனுபவித்து வந்தது தெரியவந்தது.

இதுதவிர பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கும் ஆதித்யா ராவ் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். ரெயில்வே ஊழியர்களிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக ரெயில் நிலையத்திற்கு அவர் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது. மேலும், பெங்களூரு ஜெயநகரில் மடிக்கணினி திருட முயன்றதாகவும் போலீசார் ஆதித்யா ராவை கைது செய்திருந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன் மங்களூருவில் பொம்மை துப்பாக்கியை காட்டி 2 தடவை கொள்ளை முயற்சியில் ஆதித்யா ராவ் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.

வாழ்க்கையில் விரக்தி

மெக்கானிக்கல் என்ஜினீயர் மற்றும் எம்.பி.ஏ. படித்திருந்தாலும் தான் படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்காததால் காவலாளி, ஓட்டலில் ஊழியர், சமையல்காரராக ஆதித்யா ராவ் வேலை செய்திருக்கிறார். மேலும் வாழ்க்கையில் வெறுப்பும், விரக்தியும் அடைந்த அவர் தன்னை எல்ேலாரும் திரும்ப பார்க்க வேண்டும், பிரபலமாக வேண்டும், தன்னை பற்றி நாட்டு மக்கள் பேச வேண்டும் என்பதற்காக விமானம் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு அவர் மிரட்டல் விடுத்ததும், குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு வெறும் மிரட்டல், சிறு, சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவர் தற்போது விமான நிலையத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டி, அங்கு வெடிகுண்டு வைத்த வழக்கில் போலீசாரிடம் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story