வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் பூக்கள் விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை


வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் பூக்கள் விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 23 Jan 2020 4:00 AM IST (Updated: 23 Jan 2020 1:55 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் பூக்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக பூக்கள் உள்ளது. இந்த பகுதிகளில் பயிரிட்டுள்ள பூக்களை அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என அனைவரும் அதிகாலை நேரத்தில் பூக்களை பறித்து விவசாயிகளிடம் கொடுத்து, தங்களின் சிறு, சிறு பண தேவைகளை சரி செய்து கொள்கிறார்கள். விவசாயிகள் பூக்களை பறித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் கமிஷன் கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி உரிய நேரத்தில் கொண்டு செல்லாவிட்டால், வியாபாரிகள் சென்று விடுவதால் பூக்கள் வீணாக போய்விடுவதும் உண்டு. தற்போது பனிக்காலம் என்பதால் பனிக்காலத்தில் மட்டுமே பூக்கள் அதிகம் உற்பத்தி ஆகும். காட்டுமல்லி (எனப்படும் காக்கரட்டான்) ஓரளவு உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் குறைந்து வரும் பூக்கள் விலையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். குறைந்து வரும் விலையால் சில விவசாயிகள் வேதனையில் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுவதும் உண்டு.

பூக்கள் குறைந்த அளவே வருகிறது

தற்போது விவசாயிகளிடம் இருந்து காக்கரட்டான், (காட்டு மல்லி) சம்பங்கி, அரளிப்பூ ஆகியவை மட்டுமே ஓரளவு வந்து கொண்டிருக்கிறது. மற்ற பூக்களான மல்லி, முல்லை, கனகாம்பரம், ரோஜா பூ முதலியன மிக மிக குறைந்த அளவே கமிஷன் கடைகளுக்கு வருவதாக கமிஷன் கடை உரிமையாளர்கள் கூறினர். இந்த பகுதிகளில் இருந்து கறம்பக்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு வியாபாரிகள் மூலமாகவும், பஸ்கள் மூலமாக பூக்கள் அனுப்பப்படுகிறது. நேற்று முன்தினம் பூக்கள் விலை 1 கிலோ மல்லி ரூ.800-க்கும், முல்லை ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், ரோஜா பூ ரூ.60-க்கும், அரளி பூ ரூ.130-க் கும், காக்கரட்டான் எனப்படும் காட்டு மல்லி ரூ.70-க்கும் என வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Next Story