வெளிநாட்டில் இருந்து வந்தவரை கொலை செய்து உடலை எரித்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை


வெளிநாட்டில் இருந்து வந்தவரை கொலை செய்து உடலை எரித்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 22 Jan 2020 10:15 PM GMT (Updated: 22 Jan 2020 8:38 PM GMT)

வெளிநாட்டில் இருந்து வந்தவரை கொலை செய்து உடலை எரித்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி,

திருச்சி-தஞ்சை சாலை தனரத்தினம் நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 40). இவரது மனைவி ஜவகருனிஷா. இவருடைய சகோதரர் உமர் பாரூக் (39).

சாகுல் அமீது வெளிநாட்டில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் 1-3-2009 அன்று அவர் திடீரென மாயமானார். அவர் என்ன ஆனார்? என தெரியவில்லை. இதனால் ஜவகருனிஷா தனது கணவரை காணவில்லை என்று திருச்சி காந்திமார்க்கெட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பல மாதங்களுக்கு மேல் ஆகியும் சாகுல் அமீது பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், ஜவகருனிஷா மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மதுரை ஐகோர்ட்டு இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் சாகுல் அமீது கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

4 பேர் கைது

கொலை தொடர்பாக சாகுல் அமீதுவின் மைத்துனர் உமர்பாரூக், அவரது நண்பர்களான பெல்ஸ் கிரவுண்டு பெரோஸ் அகமது (35), குட்ஷெட் ரோடு பாண்டிகுமார் (37), காட்டூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் பிரபு (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். உமர் பாரூக் தனது சகோதரி ஜவகருனிஷாவிடம் ரூ.2 லட்சம் வாங்கி இருந்தார். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும் சாகுல் அமீது அந்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த உமர் பாரூக், தனது நண்பர்களான பெரோஸ் அகமது, பாண்டிகுமார், பிரான்சிஸ் பிரபு ஆகிய 3 பேருடன் சேர்ந்து சாகுல் அமீதுவை சங்கிலியாண்டபுரம் சுப்பையா தெருவில் உள்ள தனது வீட்டில் வைத்து அடித்து கொலை செய்து உடலை மணல்வாரி துறை சுடுகாட்டில் எரித்துவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2011-ம் ஆண்டு திருச்சி 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட உமர் பாரூக் ஏற்கனவே இறந்து விட்டதால் பெரோஸ் அகமது, பாண்டிகுமார், பிரான்சிஸ் பிரபு ஆகிய 3 பேருக்கும் தலா ஆயுள் சிறை தண்டனை, தலா ரூ.1,500 அபராதம் விதித்து நீதிபதி கர்ணன் தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆஜராகி வாதாடினார்.

Next Story