ஊராட்சிமன்ற தலைவர்கள்- துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்


ஊராட்சிமன்ற தலைவர்கள்- துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 8:43 PM GMT)

ஊராட்சிமன்ற தலைவர்கள்- துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாமை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். முகாமை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு மனமார்்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். கரூர் மண்டலத்திற்குட்பட்ட கரூர், தாந்தோன்றி, அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிமன்றத்தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மிகவும் முக்கியமான பதவி என்றால் அது கிராம ஊராட்சி மன்றத்தலைவர், துணைத்தலைவர் பதவிகள்தான். மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் அடிப்படைத்தேவைகளை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே ஊராட்சி மன்றத்தலைவர், துணைத்தலைவரின் தலையாய கடமையாகும். உங்கள் ஊர் மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்குதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், தெருவிளக்குகள், சாலை வசதிகள் என அனைத்து விதமான அடிப்படை தேவைகளையும் பூரத்தி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு ஊராட்சிமன்றத்தலைவருக்கு உள்ளது. ஊராட்சி மன்றத்தலைவர் கிராம ஊராட்சியின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உற்ற துணையாக சம்பந்தப்பட்ட துணைத்தலைவர்கள் இருக்க வேண்டும்.

பயிற்சி வகுப்பு கையேடு

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது விலையில்லா கோழிக்குஞ்சுகளையும் வழங்கி வருகின்றார்கள். இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் கிராமப்பகுதிகளில் செயல்படுத்தப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். அந்தவகையில், கிராம ஊராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது என்பது குறித்தும், கிராம ஊராட்சி அமைப்புகளில் நிர்வாகத்திறன் பற்றி புரிதல், அரசியலமைப்பு விதிகள், கிராம ஊராட்சியின் அதிகாரங்கள், கடமைகள், அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த பயிற்சி வகுப்பில் துறைசார்ந்த வல்லுநர்கள் வழங்கவுள்ளார்கள். எனவே, இந்தப்பயிற்சி வகுப்பை அனைவரும் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டு்ம்.

இவ்வாறு தெரிவித்தார்.

பின்னர் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பிற்கான கையேடுகளை அமைச்சர் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் உமாசங்கர் திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்் ஏ.ஆர்.காளியப்பன், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவர் முத்துகுமார், தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சிவகாமி, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ்், கரூர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று (வியாழக்கிழமை) குளித்தலை மண்டலத்திற்குட்பட்ட குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் மற்றும் தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story