சம்பள நிலுவை தொகை வழங்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியல்


சம்பள நிலுவை தொகை வழங்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 10:28 PM GMT)

சம்பள நிலுவை தொகை வழங்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம்,

பல்லடம் வட்டாரத்தில் 10 குழந்தைகளுக்கு மேல் இயங்கும் 102 அங்கன்வாடி மையங்களும், 5 குழந்தைகளுக்கு கீழ் இயங்கும் 13 சிறிய அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இவற்றில் 193 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பல்லடம் மசூதி வீதி, பொங்கேகவுண்டன்புதூர், பச்சாபாளையம், ராயர்பாளையம், தெற்குபாளையம், பரமசிவம்பாளையம், செந்தேவிபாளையம், சாமளாபுரம் -2, சாமளாபுரம் -3 ஆகிய இடங்களில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் தனியார் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

மேலும் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு மாதம் தோறும் சரிவர சம்பளம் வழங்கப்படுவதில்லை. தனியார் வாடகை கட்டிடங்களுக்கு கடந்த பல மாதங்களாக வாடகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதனை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த ஒர் ஆண்டாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் சமையல் எரிவாவு சிலிண்டர் தொகை ரூ.500, மாதம் தோறும் வழங்க வேண்டிய காய்கறி தொகை ரூ.500 வழங்கவில்லை. பொங்கல் போனஸ் ரூ.1000, பொங்கல் முன்பணம் ஆகியவை வழங்கப்படவில்லை. இவைகளை உடனடியாக வழங்கவேண்டும், தகாத வார்த்தைகள் பேசும் பல்லடம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை இட மாற்றம் செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். அதை தொடர்ந்நது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

இந்த போராட்டத்தின்போது பல்லடம் அங்கன்வாடி மைய பணியாளர் பரமேஸ்வரி திடீரென்று தான் கொண்டு வந்து இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே மற்ற பணியாளர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்நதுசென்றனர்.

இது பற்றி சம்பந்தப்பட்ட துறை மாவட்ட அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மரகதம் சம்பவ இடத்திற்கு வந்து அங்கன்வாடி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட அலுவலகத்தில் தாருங்கள்.

விரைவாக உங்களது கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்று அங்கன்வாடி பணியாளர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story