ஊட்டியில் குறைதீர்க்கும் முகாம்: மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா தலைமை தாங்கி பேசும்போது, நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ தேசிய அடையாள அட்டை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் கடந்த 9-ந் தேதி முதல் வருகிற பிப்ரவரி மாதம் 13-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே சுய தொழில் புரியும் வகையில் விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதபோன்ற அரசின் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் ஆர்வமுடன் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பித்து, தையல் எந்திரம் மூலம் சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்களுக்குள் உள்ள தனித்திறமையை கொண்டு தைரியமுடன் இருக்க வேண்டும் என்றார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி பேசும்போது, நீலகிரியில் மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 4 ஆயிரம் பேர் தனித்துவ தேசிய அடையாள அட்டை பெற்று உள்ளனர். மற்றவர்கள் நடந்து வரும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து தனித்துவ தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 40 சதவீத ஊனத்துக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
இதையடுத்து மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை என 8 பேருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் தொழில் தொடங்குவது எப்படி, சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள், தாட்கோ திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டன. கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story