இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 24 Jan 2020 4:30 AM IST (Updated: 24 Jan 2020 12:50 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சாட்டியக்குடி, வலிவலம், திருமருகல், திட்டச்சேரி, வெள்ளப்பள்ளம், தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் வெளியூர்களில் இருந்து கல்லூரிக்கு வருபவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் கொடுக்க வேண்டிய இலவச பஸ் பாஸ் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாணவ-மாணவிகள் நாகை தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் இலவச பஸ் பாஸ் உடனே வழங்கக்கோரி கல்லூரியில் இருந்து ஊர்வலமாக சென்று தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுப்பதாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஊர்வலமாக செல்ல மாணவர்கள் கல்லூரி முன்பு கூடினர். தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் மாணவர்கள் ஊர்வலம் செல்வதற்கு அனுமதியளிக்கவில்லை. இதனால் இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கல்லூரி முன்பு மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் அசாருதீன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story