விவசாய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் ஊராட்சி தலைவர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்


விவசாய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் ஊராட்சி தலைவர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 7:36 PM GMT)

விவசாய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் கோவிந்தராவ் அறிவுறுத்தி உள்ளார்.

கள்ளப்பெரம்பூர்,

புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான அறிமுக கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று 2-வது நாளாக நடந்தது. இதில் திருவையாறு, பூதலூர், பாபநாசம், அம்மாப்பேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய 7 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 301 ஊராட்சி தலைவர்கள், 296 துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி முகாமை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கிராமப்புறங்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டுமானால் சரியான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். திட்டங்களை செயல்படுத்தும்போது விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி வரும்.

சேவை மனப்பான்மை

அரசு அதிகாரிகள் ஆய்வுக்கு வருவார்கள். அப்போது விதிமுறைகளை சரியாக பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சையில் விவசாயத்துக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த சாகுபடி பருவத்தில் கடைமடை பகுதி வரை தண்ணீர் கொண்டு சென்றுள்ளோம். குடிமராமத்து திட்டத்தில் செய்துள்ள பணிகள் போக மீதம் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்ற முயற்சி மேற்கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சி

முகாமில் ஊராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பொது சுகாதாரம், திட்ட பணிகள் செயலாக்கம், மின்னணு நிதி நிர்வாகம், தெரு விளக்கு பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி செயல் அதிகாரி வெங்கடாஜலபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் நந்தினி நன்றி கூறினார்.

Next Story