நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட வாலிபர் உடல் தோண்டி எடுப்பு - 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை
நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட வாலிபர் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு கிராமம் சுந்தராபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருடைய மகன் மாசானமூர்த்தி (வயது 24). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் டிரைவர் மற்றும் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 3 வயதில் வர்மன் என்ற மகன் உள்ளான்.
கடந்த 15-ந் தேதி பொங்கல் பண்டிகை அன்று மாசானமூர்த்தி வீட்டில் சாப்பிட்டு விட்டு வயலுக்கு செல்வதாக தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. இதையடுத்து மாசானமூர்த்தியை கண்டுபிடித்து தருமாறு, அவருடைய தந்தை சுடலைமுத்து தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மாசானமூர்த்தியின் மனைவி கிருஷ்ணவேணி குடும்பத்தினருடன், நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடமும் புகார் அளித்தனர். அதன்பேரில், தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாசானமூர்த்தியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கிணறுகளை ஆய்வு செய்தனர். அப்போது வேப்பங்குளம் ரோட்டில் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பெட்ரோல் மிதந்ததை கண்டனர். எனவே, மாசானமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் அதனுள் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் எண்ணினர்.
அப்போது கிணற்றின் அருகில் ஓரிடத்தில் குழி தோண்டப்பட்டு, புதிதாக மணல் போட்டு மூடப்பட்டு, அதன்மேல் முள் செடிகள் வைக்கப்பட்டு இருந்ததையும் போலீசார் பார்த்தனர். இதையடுத்து மாசானமூர்த்தியை மர்ம நபர்கள் கொலை செய்து குழி தோண்டி புதைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இதையடுத்து நெல்லை தாசில்தார் ராஜேசுவரி, டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், தடயவியல் நிபுணர் ஆனந்த், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பக்டர் வனசுந்தர், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் நேற்று மாசானமூர்த்தி உடல் புதைக்கப்பட்ட பகுதிக்கு வந்தனர்.
அங்கு பகல் 12 மணி அளவில் குழி தோண்டப்பட்டு உடல் வெளியே எடுக்கப்பட்டது. அவரது ஆடைகளை பார்த்து உறவினர்கள் மாசானமூர்த்தி தான் என்று அடையாளம் காட்டினர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். அதில் 2 பெண்கள் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாசானமூர்த்தியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் செல்வமுருகன் தலைமையில் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாசானமூர்த்தியின் மோட்டார் சைக்கிளும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் சந்தேகப்படும் படியான நபர்கள் 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாசானமூர்த்திக்கு மர்ம நபர்கள் அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக்கொடுத்துள்ளனர். அவர் போதையில் இருந்த போது ஏற்பட்ட தகராறில் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளனர். அதனால் கழுத்து தொங்கிய நிலையில் இருந்ததால், அதன் பிறகு உடலை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து வந்து 5 அடி ஆழத்துக்கு குழி தோண்டி புதைத்து உள்ளனர் என்று தெரியவந்தது.
ஆனால், மாசானமூர்த்தியை எதற்காக மர்ம நபர்கள் கொலை செய்தனர் என்ற விவரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story