மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.140 கோடி காப்பீடு தொகை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.140 கோடி காப்பீடு தொகை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 24 Jan 2020 4:15 AM IST (Updated: 24 Jan 2020 1:47 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.140 கோடி காப்பீடு தொகை வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

வைப்பாற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள் அமைக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பல கிராமங்கள் விடுபட்டு உள்ளன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு மானாவாரி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் விவசாயிகளையும் சேர்த்து, அவர்களின் நிலங்களில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் ஆழ்வார்திருநகரி பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும்.

கடம்பா குளத்தை தூர்வார வேண்டும். வெங்காயம், உளுந்து, பாசிப்பயறு மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது. பயிர் சாகுபடி அளவைவிட பயிர் காப்பீடு செய்யப்பட்ட பரப்பின் அளவு அதிகமாக உள்ளது. இதில் மோசடி நடந்து உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பணம் செலுத்திய மேலஈரால் கிராமம் முழுமையாக விடுபட்டு உள்ளது. கருமேணியாற்றில் மணல் மேடு அதிகமாக உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். கோரம்பள்ளம் குளத்தில் 1,200 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது. இந்த குளத்தின் நடுவில் மணல் திட்டு அமைத்து பழமரக்கன்றுகள் நட வேண்டும்.

உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சுமார் 15 அடி உயர்ந்து உள்ளது. ஆனாலும் தண்ணீர் உப்பு நீராகவே உள்ளது. ஆகையால் உப்பு நீரை மாற்றுவதற்கு உரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நல்லூர் குளத்தில் இருந்து செல்லும் மறுகால் ஓடை இதுவரை தூர்வாரப்படவில்லை. ஆனால் தூர்வாரப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆகையால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டத்தின் போது விவசாயிகள் சிலர் மழையால் சேதம் அடைந்த மக்காச்சோளம் பயிருடன் வந்து கலெக்டரிடம் முறையிட்டனர். அதே போன்று ஆவல்நத்தத்தை சேர்ந்த ரெங்கசாமி என்பவர், ஆவல்நத்தம் பகுதியில் கடந்த 2015-16-ம் ஆண்டு வாழை சாகுபடி செய்யாத நிலையில், வாழை சாகுபடி செய்ததாக 28 பேர் பயிர்க்கடன் பெற்று உள்ளனர். அந்த கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் திடீரென கலெக்டர் முன்பு வந்து தரையில் அமர்ந்தார். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது-

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்து உள்ளது. சராசரியை விட 35 சதவீதம் அதிக மழை பெய்து இருக்கிறது. அனைத்து அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. 2018-19-ம் ஆண்டு வறட்சியால் பல்வேறு பயிர்கள் சேதம் அடைந்தன. இதில் சேதம் அடைந்த மக்காச்சோளம் பயிருக்கு ரூ.140 கோடி காப்பீடு தொகை அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதில் 74 ஆயிரத்து 375 விவசாயிகளுக்கு ரூ.106 கோடியே 34 லட்சம் காப்பீட்டு தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

இதர பயிர்களுக்கான காப்பீட்டு தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாண்டியன் கிராம வங்கி பெயர் மாற்றப்பட்டதால் ஏற்பட்டு உள்ள பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் பேசி தீர்வு காணப்பட்டு உள்ளது. பிரதமமந்திரி கிசான் வெகுமதி திட்டத்துக்கான குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்திலும் சேர்ந்து பயன்பெறலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் காப்பீடு செய்தவர்களில் 99 சதவீதம் பேருக்கு காப்பீடு தொகை வந்து உள்ளது. 100 நாள் வேலை உறுதி திட்டம், உரிய சட்ட விதிகளின்படி மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் தனிநபர் வயல்களில் பணி மேற்கொள்ள முடியாது. ஆனால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வருவாய்த்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. அந்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பயிர் காப்பீடு திட்டத்தில் 55 ஆயிரம் எக்டர் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 64 ஆயிரம் எக்டருக்கு பயிர் காப்பீடு செலுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, உதவி கலெக்டர்கள் சிம்ரான்ஜீத்சிங் கலோன், தனப்பிரியா, விஜயா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாத்துரை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரசுவதி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story