ஜலகண்டாபுரத்தில் நகைக்கடையில் 8½ கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை - 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
ஜலகண்டாபுரத்தில் உள்ள நகைக்கடையில் 8½ கிலோ வெள்ளிப்பொருட்களை 3 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேச்சேரி,
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தில் கடைவீதி பஜார் தெருவில் வசித்து வருபவர் ரவி (வயது 55). ஜவுளிக்கடை நடத்தி வரும் இவர் தனது வீட்டின் அருகே கடந்த 1-ந் தேதி அன்று சாந்தி ஜூவல்லரி என்ற பெயரில் புதிதாக வெள்ளி நகைக்கடையை திறந்தார். இந்த கடையில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு ரவி தனது வீட்டுக்கு சென்று விட்டார். இவரின் கடை அருகே துணி தேய்க்கும் கடை ஒன்று உள்ளது. நேற்று காலை 5.30 மணியளவில் துணி தேய்ப்பவர் கடைக்கு வந்தார். அப்போது நகைக்கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவர், ரவிக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த ரவி, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த வெள்ளிக்கொலுசுகள், அரைஞாண் கயிறுகள் உள்ளிட்ட 8 கிலோ 686 கிராம் வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன்மதிப்பு சுமார் ரூ.4¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து நகைக்கடை உரிமையாளர் ரவி, ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார்.
இதனிடையே தகவல் கிடைத்ததும், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், ஜலகண்டாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசாரிடம் அருகில் உள்ள பாத்திரக்கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு உடனடியாக கொள்ளையர்களை பற்றி விசாரித்திட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து அருகில் உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் பார்த்தனர். அதில் நள்ளிரவு நேரத்தில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றதை தொடர்ந்து, அதை நோட்டமிட்ட 3 பேர் கும்பல் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த நகைக்கடைக்கு வரும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் அங்கு கடையின் முன்பிருந்த விளக்கிற்கான மின் இணைப்பை அவர்களில் ஒருவர் துண்டித்தார். இதனால் அந்த கடை முன்பு இருட்டாக இருந்ததை அடுத்து அவர்கள் ஷட்டர் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர்.
ஒரு பூட்டை உடைத்த அந்த கும்பல், மற்றொரு பூட்டை உடைக்க முடியாததால், ஆக்சா பிளேடு மூலம் பூட்டை அறுத்துள்ளது. பின்னர் கடைக்குள் சென்று அங்கிருந்த வெள்ளிப்பொருட்களை சுமார் அரை மணி நேரத்தில் கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த கொள்ளையின் போது, ஒருவர் நகைக்கடைக்குள் வெள்ளிப்பொருட்களை எடுத்துக்கொண்டு இருந்த அதே நேரத்தில் மற்ற இருவர் மோட்டார் சைக்கிளில் வெளியே நின்று கொண்டு ஆட்கள் யாரேனும் வருகிறார்களா? என நோட்டமிடுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், புதிதாக திறக்கப்பட்ட வெள்ளி நகைக்கடையில் வெள்ளிப்பொருட்கள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதையும், அங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததையும் மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஜலகண்டாபுரத்தில் நகைக்கடையில் 8½ கிலோ வெள்ளிப்பொருட்களை 3 பேர் கும்பல் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story