காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் புகைப்படம் எடுத்த 2 பேர் அடையாளம் தெரிந்தது - வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நின்று செல்போனில் புகைப்படம் எடுத்த 2 பேர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நின்று 2 பேர் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பரவியது. காமாட்சியம்மன் கோவிலில் புகைப்படம் எடுத்தவர்கள் யார்? என்ற சந்தேகம் போலீசாரிடையே எழுந்தது.
இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும், அடையாளம் காண்பதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் சேகரித்தனர்.
அப்போது சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அவர்கள் இருவரும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு நேரில் சென்று தொடர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், வங்க தேசத்தை சேர்ந்த டி.எம்.டி.ஷான்கான் மற்றும் டி.எம்.டி.அப்துல்லா ஹக்தாலி என்பது தெரியவந்தது.
இருவரும் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததும், ஓய்வு நேரங்களில் காஞ்சீபுரத்தில் உள்ள முக்கியமான கோவில்களை சுற்றி பார்க்க வந்ததும் தெரியவந்தது. அவர்கள் சுற்றுலா பயணிகள்தான் என்பதும் சந்தேகப்படும் நபர்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.
இந்த தகவலை உறுதிப்படுத்தியதுடன், சிறப்பாக செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான தனிப்படை போலீசாரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி பாராட்டி சான்றிதழும், ஊக்கத் தொகையும் வழங்கினார்.
Related Tags :
Next Story