பிச்சை எடுத்த பணத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு உதவிய முதியவர் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை வழங்கினார்


பிச்சை எடுத்த பணத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு உதவிய முதியவர் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை வழங்கினார்
x
தினத்தந்தி 24 Jan 2020 4:30 AM IST (Updated: 24 Jan 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

பிச்சை எடுத்த பணத்தில் முதியவர் ஒருவர் 3 அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் வழங்கினார்.

ஆரல்வாய்மொழி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் புல்பாண்டி என்ற பாண்டி (வயது 66). இவர், மனைவி இறந்த பின் 1979-ம் ஆண்டு மும்பைக்கு சென்றார். அங்கு ஒரு கோவிலில் தூய்மை பணியை மேற்கொண்டார்.

பின்னர், 2000-ம் ஆண்டு ஊருக்கு வந்த அவர் திருச்செந்தூர் பகுதியில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார். கிடைத்த பணத்தில் தனது தேவையை பூர்த்தி செய்த பின் மீதம் உள்ள பணத்தில் உதவி செய்ய தொடங்கினார். அதன்படி கடந்த 18 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பணத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு உதவி செய்து உள்ளார்.

குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

தற்போது ஆரல்வாய்மொழி அருகே தோவாளை, வீரநாராயணமங்கலம், செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில் குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி தோவாளை அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் சந்திரபானுமதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். 3 பள்ளிகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை பாண்டி வழங்கினார்.

நிகழ்ச்சியில் தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகேஷ், செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், வீரநாராயணமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியர் இருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாண்டியின் உயர்ந்த குணத்தை தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்கள் பாராட்டினர். 

Next Story