போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்கள் மீது நடவடிக்கை கார்கள்- ஆட்டோவுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்


போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்கள் மீது நடவடிக்கை கார்கள்- ஆட்டோவுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்
x
தினத்தந்தி 24 Jan 2020 4:15 AM IST (Updated: 24 Jan 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் நீண்ட நாட்களாக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கார்கள், ஆட்டோக்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகரில் ஆங்காங்கே முக்கிய சாலைகள், தெருக்கள் போன்றவற்றில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் கார் உள்ளிட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருப்பதாக புகார்கள் வந்தன. இதற்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களில் நோட்டீஸ் ஒட்டி 3 நாட்களுக்குள் அங்கிருந்து அப்புறப்படுத்தச் செய்வது என்றும், அதையும் மீறி நிறுத்தப்பட்டால் மாநகராட்சி சார்பில் அப்புறப்படுத்தி அதற்குரிய தொகையை வாகன உரிமையாளரிடம் இருந்து வசூலிப்பது என்றும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

15 வாகனங்கள்

அதன்படி நேற்று முதல் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வாகனங்களில் நோட்டீஸ் ஒட்டும் பணி தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின்பேரில் நகரமைப்பு ஆய்வாளர்கள் கெபின்ஜாய், சந்தோஷ், நாகர்கோவில் நகர போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நாகர்கோவில் டிஸ்ட்டில்லரி ரோடு, கணேசபுரம் ரோடு, வடசேரி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றும் வாகன பார்க்கிங் அல்லாத பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு நேற்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் வாகன பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, 3 நாட்களில் இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் அப்புறப்படுத்தப்பட்டு அதற்குரிய தொகை உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என ஆணையர் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று ஒரே நாளில் 15 கார்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் கூறினர். 

Next Story