‘பெரியார் பற்றி எதுவுமே தெரியாத ரஜினி பேசாமல் இருப்பது நல்லது’ துரைமுருகன் பேட்டி


‘பெரியார் பற்றி எதுவுமே தெரியாத ரஜினி பேசாமல் இருப்பது நல்லது’ துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 9:29 PM GMT)

‘பெரியார் பற்றி எதுவுமே தெரியாத ரஜினிகாந்த் பேசாமல் இருப்பதே நல்லது’ என நாமக்கல்லில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சட்டப்பேரவை பொது கணக்கு குழு சார்பில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு பொது கணக்கு குழுவின் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து துறைகளிலும் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினோம். பொதுவாக இந்த குழுவின் நோக்கம் அரசாங்கம், எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது என சட்டமன்றத்தில் அறிவிக்கிறது. அப்படி ஒதுக்கப்பட்ட பணத்தில் அந்த பணி குறித்த நேரத்திற்குள் முடிக்கப்பட்டு உள்ளதா? என பார்ப்பது தான். அந்த வகையில் தான் ஆய்வு நடத்தப்பட்டது.

விளக்கம் கேட்டு உள்ளோம்

ஆய்வில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்காத பணிகளுக்கு விளக்கம் கேட்டு உள்ளோம். எங்கள் ஆய்வு முடிவுகள் சட்டமன்றத்தில் அறிக்கையாக வைத்த பிறகு வெளியிடப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் திட்டப்பணிகள் சிலவற்றை வேகப்படுத்த வேண்டும். அந்த பணியை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து உள்ளோம். இந்த மாவட்டத்தின் கலெக்டர் மெகராஜ் வேலூர் மாவட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அவரிடம் பரபரப்பு இருக்காது. பணிகளை நன்றாக செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த்

பின்னர் துரைமுருகன் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரியார் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், விவாத பொருளாக இன்றும் நிலைத்து நிற்கிறார். பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்துக்கு தலையும் தெரியாது வாலும் தெரியாது. எனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது போல், பெரியாரை பற்றி எதுவுமே தெரியாத ரஜினி பேசாமல் இருந்தால் அவருக்கு நல்லது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இது ஒரு திறந்தமடம்.

வாரிசு அரசியல் பற்றி பேசும் அமைச்சர் ஜெயக்குமார் முதலில் அவரது மகனை அரசியலில் இருந்து விலக்கி கொள்ளட்டும். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்துக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்தி கொள்ள மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story