சம்பள உயர்வு கோரி பெங்களூருவில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று வாபஸ் பெற்றனர்
சம்பள உயர்வு கோரி பெங்களூரு சுதந்திர பூங்காவில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று 2 நாள் தொடர் தர்ணா போராட்டத்தை தொடங்கினர். இதற்கிடையே அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் அரசின் அங்கன்வாடி மையங்களில் வேலை செய்யும் உதவியாளர்கள், சமையல் தொழிலாளர்கள் என சுமார் 1.50 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு சம்பளம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு சுதந்திர பூங்காவில் 23-ந்தேதி (அதாவது நேற்று) தொடங்கி 24-ந்தேதி வரை 2 நாள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி கர்நாடகம் முழுவதும் இருந்து அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு பேரணியாக பெங்களூரு சுதந்திர பூங்காவுக்கு சென்றனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பிய படி சென்றனர்.
தர்ணா போராட்டம்
அவர்கள் சுதந்திர பூங்கா முன்புள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கூறுகையில், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள கர்நாடக பட்ெஜட்டில் அங்கன்வாடி ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும். பலமுறை சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்தி உள்ளோம். ஆனால் எங்களுடைய கோரிக்கையை மாநில அரசு இதுவரை நிறைவேற்றியது இல்லை. சம்பந்தபட்ட மந்திரி நேரில் வந்து எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர்.
வாபஸ் பெற்றனர்
இந்த நிலையில் போராட்டதில் ஈடுபட்டவர்களை சந்தித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதைதொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு ரெயில் மூலம் தங்களது ஊர்களுக்கு திரும்பினர்.
Related Tags :
Next Story