மங்களூருவில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆதித்யாராவ் மீது வழக்கு


மங்களூருவில் இருந்து ஐதராபாத் சென்ற   விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆதித்யாராவ் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Jan 2020 4:15 AM IST (Updated: 24 Jan 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆதித்யாராவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மங்களூரு,

மங்களூரு விமான நிலையத்தில் கடந்த 20-ந்தேதி வெடிகுண்டு இருந்த பையை போலீசார் கண்டெடுத்தனர். அதனை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மும்முரமாக ஈடுபட்டனர்.

அதே சமயத்தில் மங்களூரு விமான நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஊழியரான அப்துல் ஹமீது என்பவர் எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், மங்களூருவில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட்டு சென்ற இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

அவசரமாக தரையிறக்கி சோதனை

இதனால் மங்களூரு விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் மேலும் பரபரப்பானார்கள். உடனே இந்த தகவல் இன்டிகோ விமானத்தின் விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி விமானி, அவசரம், அவசரமாக விமானத்தை மங்களூரு விமான நிலையத்தில் தரை யிறக்கினார். விமானத்தில் இருந்த பயணிகளும் அவசரம், அவசரமாக இறக்கி, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வெடிகுண்டு இருக்கிறதா என சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இருப்பினும் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அப்போது தான் வதந்தி என்பது தெரியவந்தது.

ஆதித்யாராவ் மீது வழக்கு

இந்த நிலையில், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக ஆதித்யாராவ் மீது பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அவரிடம் நடத்திய விசாரணையில், மங்களூருவில் இருந்து ஐதராபாத் சென்ற இன்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் பஜ்பே போலீசார், விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆதித்யாராவ் மீது மற்றொரு வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்த தகவலை மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

Next Story