ஓசிப்பயணம் செய்தவர்களிடம் ஒரே ஆண்டில் ரூ.1½ கோடி அபராதம் வசூலித்த டிக்கெட் பரிசோதகர்


ஓசிப்பயணம் செய்தவர்களிடம்   ஒரே ஆண்டில் ரூ.1½ கோடி அபராதம் வசூலித்த டிக்கெட் பரிசோதகர்
x
தினத்தந்தி 24 Jan 2020 4:32 AM IST (Updated: 24 Jan 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் தனி ஆளாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர், ஓசிப்பயணம் செய்த ரெயில் பயணிகளிடம் இருந்து ஒரே ஆண்டில் ரூ.1½ கோடி அபராதம் வசூலித்து சாதனை படைத்து உள்ளார்.

மும்பை, 

மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர்நாடியாக உள்ளது. இங்கு தினமும் சுமார் 80 லட்சம் மக்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்கின்றனர். எனினும் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளால் ரெயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க டிக்கெட் பரிசோதகர்கள் புறநகர் மற்றும் நீண்ட தூர ரெயில்கள் வரும் ரெயில் நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், மத்திய ரெயில்வேயை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் எஸ்.பி. கலன்டே ஓசிப்பயணம் செய்த பயணிகளிடம் இருந்து தனி ஆளாக ரூ.1 கோடியே 51 லட்சம் அபராதம் வசூலித்து சாதனை படைத்து உள்ளார். அவர் கடந்த ஒரு ஆண்டில் 22 ஆயிரத்து 680 பேரிடம் இந்த அபராத தொகையை வசூலித்து உள்ளார்.

மேலும் 3 பேர்

இதேபோல எம்.எம்.ஷிண்டே, டி.குமார், ரவிகுமார் ஆகிய 3 டிக்கெட் பரிசோதகர்கள் கடந்த ஒரு ஆண்டில் முறையே ரூ.1 கோடியே 7 லட்சம், ரூ.1 கோடியே 2 லட்சம், ரூ.1 கோடியே 45 லட்சம் அபராதம் வசூலித்து உள்ளனர்.

ரூ.1 கோடிக்கு மேல் அபராதம் வசூலித்த டிக்கெட் பரிசோதகர்கள் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள் என மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர் கூறினார்.

கடந்த ஆண்டில் மத்திய ரெயில்வேயில் ஓசிப்பயணம் செய்து பிடிபட்ட பயணிகளிடம் இருந்து ரூ.192 கோடியே 51 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story