நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேச்சு, எச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை - போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேச்சு, எச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை - போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Jan 2020 3:30 AM IST (Updated: 24 Jan 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின் போது மேடை அமைத்து பேசுவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருமயம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும், உடனடியாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வக்கீல் துரைசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “மத்தியில் ஆளும்கட்சியான பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்பதால் எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க காவல்துறை தயங்குகிறது. எனவே வழக்கை விசாரித்து, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, எச்.ராஜா மீதான வழக்கை திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்து 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Next Story