அருப்புக்கோட்டை, பள்ளிக்கூட விடுதியில் மாணவர் தற்கொலை
அருப்புக்கோட்டையில் பள்ளிக்கூட விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அருப்புக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கன்னிச்சேரியை சேர்ந்தவர் நாகநாதன். இவருடைய மகன் ஹரிபாபு (வயது 18). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளிக்கூட விடுதியில் தங்கி இருந்தார்.
பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்தவர் கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் உணவு சாப்பிட விடுதிக்கு ஹரிபாபு சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் அவர் வகுப்பறைக்கு வராததால் மற்றொரு மாணவர் தேடிச் சென்றார்.
அந்த மாணவர் விடுதிக்கு சென்று அறையை திறந்து பார்த்தபோது, தூக்கில் ஹரிபாபு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் இது பற்றி அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் தென்றல் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர் ஹரிபாபு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மாணவரின் குடும்பத்தினரும் விரைந்து வந்தனர்.
ஹரிபாபு உடலை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ. செல்லப்பா, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story