போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய வேண்டும் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை
போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, போக்சோ வழக்குகளை விரைந்து முடிப்பது மற்றும் குற்ற சம்பவங்களை முற்றிலும் கட்டுப்படுத்துவது ஆகியவை குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தேக்கத்தை கணக்கிட்டு அந்த வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். மாவட்டத்தில் போக்சோ வழக்குகள் அதிகம் வராத அளவிற்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வாரம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் சாலை பாதுகாப்பு சம்பந்தமாக போலீசார் கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேநேரத்தில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும். விலை மதிப்பில்லாதது உயிர் என்பதை வாகன ஓட்டிகள் அனைவருக்கும் எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து வெளியே சுற்றித்திரியும் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களை உடனுக்குடன் கைது செய்து பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர், ராஜன், நீதிராஜ், அஜய்தங்கம், கனகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story