உத்தவ் தாக்கரேயுடன் அயோத்தி வாருங்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு சிவசேனா அழைப்பு
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பதவி பிரச்சினையால் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது.
சிவசேனா கட்சி கொள்கையில் முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவு பெறுவதை அடுத்து மார்ச் மாதம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி சென்று ராமரை வழிபட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தில் கலந்துகொள்ள கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-
எல்லோரும் வணங்குகின்றனர்
எங்கள் கூட்டணி கட்சிகள் உள்பட அனைவரையும் ராமரை தரிசிக்க அழைப்பு விடுக்கிறோம். எல்லோரும் வீட்டில் ராமரை வணங்குகிறார்கள். எனவே, அயோத்தியில் பிரார்த்தனை செய்வதில் அவர்கள் எங்களுடன் சேரலாம்.
மகா விகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கியபோது 3 கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கும், ராமரை வணங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. கடந்த நவம்பர் 24-ந் தேதி அயோத்தி செல்ல உத்தவ் தாக்கரே திட்டமிட்டு இருந்த நிலையில், மாநிலத்தில் மாற்று அரசை உருவாக்குவது என தேசியவாத காங்கிரஸ் கட்சி தீர்மானித்ததால், அவர் தனது பயணத்தை தள்ளி வைத்து இருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமரின் அருள்
மேலும் இதுகுறித்து சஞ்சய் ராவத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “தற்போது செயல்பட்டு வரும் அரசு ராமர் அருளால் 5 ஆண்டுகள் நிறைவு செய்யும். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி விஜயம் செய்து ராமரின் அருள் பெறுவார். மேலும் அவரது எதிர்கால திட்டங்களை பட்டியலிடுவார்” என்றார்.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடைசியாக நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அயோத்தி சென்று பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story