கடந்த செப்டம்பர் மாதத்திற்கான இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
கடந்த செப்டம்பர் மாதத்திற்கான இலவச அரிசி வழங்குவதற்கு பதிலாக பணமாக வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு 10 கிலோ, சிவப்பு ரேஷன்கார்டு களுக்கு தலா 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
ஆனால் மக்கள் இலவச அரிசியை விரும்புவதாகவும், அரிசியே வழங்கவேண்டும் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை வலியுறுத்தி வந்தது. இதுதொடர்பான பிரச்சினையில் தலையிட்ட உள்துறை அமைச்சகம் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க ஒப்புதல் அளித்தது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கான இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் (ரூ.15.65 கோடி) செலுத்த கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 848 சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களும், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 834 மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களும் பயனடைவார்கள்.
அதாவது மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.300-ம், சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.600-ம் கிடைக்கும். இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை ரூ.105.40 கோடி இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story