ஜனாதிபதி உத்தரவு வரும்வரை ரோடியர் மில்லில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் - கவர்னர் கிரண்பெடிக்கு நாராயணசாமி கடிதம்
ஜனாதிபதியின் உத்தரவு வரும்வரை ரோடியர் மில்லில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடிக்கு கடிதம் அனுப்பப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சுபாஷ் சந்திரபோசின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். அப்போது நாராயணசாமி பேசியதாவது:-
நாட்டின் சுதந்திரத்திற்காக காந்தி அறவழியில் போராடினார். சுபாஷ்சந்திரபோஸ் ஆயுதங்களுடன் போராடினார். அவருடைய கருத்துகள் காங்கிரஸ் கட்சியில் எடுபடாமல் போனாலும்கூட தனது கொள்கையில் உறுதியாக இருந்து பலகட்ட போராட்டங்களை நடத்தினார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் ஜனநாயகத்துக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஜனநாயக வழியில் ஆட்சி நடத்தினோம். குறிப்பாக மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வளர்ச்சி கண்டது.
இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக சரிந்துள்ளது. அது இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். அதற்கு வேலையில்லா திண்டாட்டம், தொழிற்சாலைகளை மூடுவது, மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லாதது, வெளிநாட்டு மூலதனம் வராதது, ஏற்றுமதி குறைந்தது, இறக்குமதி அதிகரித்திருப்பது போன்றவை தான் காரணம்.
இதைப்பற்றி எல்லாம் பிரதமரும், மத்திய மந்திரிகளும் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் குடியுரிமை திருத்த சட்டம், மக்கள்தொகை பதிவேடு ஆகியவைதான்.
குடியுரிமை திருத்த சட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளோம். ஆனால் உள்துறை மந்திரி அமித்ஷா சட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவேன் என்கி்றார். மத்திய அரசு புதுவை மாநிலத்தை புறக்கணிப்பது மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான தமிழகத்தையும் புறக்கணிக்கிறது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். தற்போது மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உத்தரவு போட்டுள்ளனர். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை எந்த காலத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து 38 கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். போராட்டத்தின் 6-ம் நாளில் கவர்னர் அழைத்து பேசினார். அப்போது அமைச்சரவை முடிவின்படி ரோடியர், சுதேசி, பாரதி மில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கவேண்டும் என முதல் கோரிக்கை வைத்தோம். ஆனால் கவர்னர் மில்களை மூடவேண்டும் என்றார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு குழு அமைத்து அந்த குழு அறிக்கையின்படி ஒப்புதல் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
மில் தொழிலாளர்களுக்கு லே-ஆப் சம்பளம் வழங்க கோப்பு அனுப்பினால் கவர்னர் கிரண்பெடி மில்லை மூடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதனை நாங்கள் ஏற்கவில்லை. அரசின் எண்ணப்படி விருப்ப ஓய்வு வழங்குவதா? கவர்னர் முடிவின்படி மில்லை மூடுவதா? என்பது தொடர்பான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆனால் கவர்னர் மத்திய அரசின் அதிகாரத்தையும், ஜனாதிபதியின் அதிகாரத்தையும் கையில் எடுத்து கொண்டு மில்லை மூடவேண்டும் என்று தன்னிச்சையாக அதிகாரிகளை மிரட்டி உத்தரவிடுகிறார். அந்த கோப்பு என்னிடமும் வரவில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் வரவில்லை.
அந்த உத்தரவை நடை முறைப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கவர்னர் அறிவுறுத்தியுள்ளார். இப்படிப்பட்ட அராஜகம் செய்யும் கவர்னர் புதுச்சேரிக்கு தேவையா? இவரது செயல்பாடுகளை பிரதமரும், மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளது. மில்லை மூடினால் தொழிலாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத்தான் எதிர்த்து போராடுவார்கள். கவர்னரை எதிர்த்து போராட மாட்டார்கள். மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் நாங்கள்தான்.
மில்லை மூட உத்தரவு வெளியானதும் தொழிற்சங்கத்தினர் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் என்னை சந்தித்து பேசினார்கள். அவர்களும் மில்லை மூடுவதை ஏற்கமாட்டோம், தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுதான் கொடுக்க வேண்டும் என்றனர்.
தொழிலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சரவை எல்லோரும் ஒருங்கிணைந்து தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க சொல்லும்போது மில்லை மூடவேண்டும் என்று உத்தரவிட கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கவர்னரின் செயல்பாட்டை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நானும், தொழில்துறை அமைச்சர் ஷாஜகானும் கவர்னர் கிரண்பெடிக்கு மீண்டும் கோப்பு அனுப்ப உள்ளோம். அதில் நாங்கள் விருப்ப ஓய்வு கொடுக்க சொல்கிறோம். நீங்கள் மில்லை மூட சொல்கிறீர்கள். ஜனாதிபதியின் உத்தரவுவரும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கடிதமும் அனுப்ப உள்ளோம். புதுவை மக்களுக்கு தொடர்ந்து தொல்லை தரும் கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் தேவதாஸ், வீரமுத்து, எம்.ஏ.கே.கருணாநிதி, தனுசு, ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story